கோவிட் சடலங்கள் குறித்த இறுதி கிரியைகளுக்கு 10 நிமிடங்கள் அவகாசம் வழங்க தீர்மானம்

0

கோவிட் -19 நோய்த் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்கள் குறித்த இறுதிக் கிரியைகளுக்கு பத்து நிமிட கால அவகாசம் வழங்கப்படும் என சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊடக அறிக்கையில் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைக்கு அமைய சடலங்கள் அடக்கம் செய்யப்படும் இடங்கள் குறித்து அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களைத் தகனம் செய்தல் அல்லது அடக்கம் செய்தல் ஆகிய எந்த வழிமுறையைப் பின்பற்றினாலும் அது மரணம் நிகழ்ந்து 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படக் கூடாது எனவும், சடலத்தைப் பதப்படுத்தவோ அல்லது கழுவவோ கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனம் தெரியாத, உரிமை கோரப்படாத சடலங்கள் அரசாங்க செலவில் தகனம் செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவிட் சடலங்களைக் கையாளும் நபர்கள் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார விதிமுறைகளுக்கு அமையச் சடலங்கள் ஓர் தீவில் அடக்கம் செய்வதே விரும்பத்தக்கது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலங்கள் 1.5 மீற்றர் முதல் 3.0 மீற்றர் ஆழத்தில் புதைக்கப்பட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலங்கள் புதைக்கப்படும் இடத்திற்கும் நீர் நிலைகளுக்கும் இடையிலான தூரம் குறித்தும் இந்த வழிகாட்டல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இறுதிக் கிரியைகள் மேற்கொள்வதற்கு பத்து நிமிட கால அவகாசம் வழங்கப்படும் எனவும், தூரத்திலிருந்து சடலத்தை உறவினர்கள் பார்வையிடுவதற்கு 10 நிமிட கால அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.