உரத் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் காய்கறிகள் உள்ளிட்ட ஏனைய பயிர் செய்கையிலிருந்து விலகுவதற்கு விவசாயிகள் தீர்மானித்துள்ளதாக விவசாயிகள் அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கிடைத்துவரும் காய்கறிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதன் காரணமாக, தற்போது காய்கறிகளின் விலை நூற்றுக்கு நூறு வீதம் அதிகரித்துள்ளதாக அறியமுடிகிறது.
முன்னதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு 25 இலட்சம் கிலோ வரையில் காய்கறிகள் கிடைத்து வந்த நிலையில், தற்போது அது 3 இலட்சமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேபோல எதிர்வரும் 2 மாதங்களில் மழையுடனான வானிலை நிலவுமானால் காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கும் எனவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மொத்த விற்பனை சந்தையில் 200 ரூபாவாக இருந்த போஞ்சி ஒரு கிலோ தற்போது 450 ரூபாவாக அதிகரித்துள்ளது. மேலும் 280 ரூபாவில் இருந்த மாலுமிரிஸ் 540 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், பச்சை மிளகாய் கிலோ 120 ரூபாவாகவும், கெரட் 120 ரூபாவாகவும் காணப்பட்ட நிலையில் இவைகளின் விலையும் 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் அமைப்பின் பிரதிநிதிகள் குறிப்பிடுகின்றனர்.