சப்ரிகம வேலைத்திட்டங்கள் மீண்டும் மட்டக்களப்பில் ஆரம்பம்!

0

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த அரசாங்கத்தின் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் சப்ரிகம வேலைத்திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட 48 கிராமங்களிலும் தலா இருபது இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவந்தன.

எனினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறித்த அபிவிருத்தி பணிகள் கடந்த இரண்டு மாதகாலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அந்த அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக ஐந்து வீதிகள் புனரமைக்கு வேலைத்திட்டங்கள் ஐம்பது இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

இருதயபுரம் மேற்கு, பனிச்சையடி, கொக்குவில், வாவிக்கரை வீதி உட்பட ஐந்து இடங்களில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரினால் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த வீதி அபிவிருத்தி பணிகள் நடவடிக்கைகளில் மாநகரசபை உறுப்பினர்களான வி.பூபால்ராஜா, து.மதன் மற்றும் மாநகரசபை பொறியியலாளர், மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் சுதர்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அரசாங்கத்தினால் ஒதுக்கீடுசெய்யப்படும் நிதிக்கு அதிகமான வேலைத்திட்டங்கள் மட்டக்களப்பு மாநகரசபையினால் முன்னெடுக்கப்படுவதாக மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் இதன்போது தெரிவித்தார்.