சிகை அலங்கார நிலையங்கள் குறித்து சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் வலியுறுத்து

0

சிகை அலங்கார நிலையங்களிலிருந்து தொற்றுகள் ஏற்படலாம் என்ற காரணம் பலமாக உள்ளமையினால் சுகாதார அமைச்சின் அறிவுரைக்கு அமைய தமது பிராந்தியத்திலும் சகல சிகை அலங்கார நிலையங்களும் அழகு நிலையங்களும் மூடப்பட்டிப்பதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.

அம்பாறையில் கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) கருத்துத் தெரிவித்துள்ள அவர்,

“வேறு நாடுகளில் இருந்து கற்றுக்கொண்ட விடயங்களிலிருந்து சிகை அலங்கார நிலையங்களிலிருந்தும் தொற்றுகள் ஏற்படலாம் என்ற காரணத்தினால் சுகாதார அமைச்சின் அறிவுரைக்கு அமைய எமது பிராந்தியத்திலும் சகல சிகை அலங்கார நிலையங்களும் அழகு நிலையங்களும் மூடப்பட்டிருக்கின்றன.

இருப்பினும் மக்களுக்குத் தேவையான சேவைகளை வீடுகளுக்குச் சென்று மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. நேற்று முன்தினம் நாங்கள் சிகை அலங்கார நிலைய சங்கங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தோம்.

அதனடிப்படையில், வீடுகளில் உள்ளவர்களின் துணிகளைப் பயன்படுத்தி சிகை அலங்காரத்தை மேற்கொள்ள முடியும். அதன்பின்னர் ஒவ்வொரு நபருக்கும் சிகை அலங்காரம் மேற்கொண்ட பின்னர் குறித்த சிகையலங்கார கருவிகள் அனைத்தும் சவர்க்காரம் மற்றும் தொற்று நீக்கிகளைப் பயன்படுத்தி தொற்று நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற அறிவுரைகளையும் நாங்கள் வழங்கியிருந்தோம்.

இதேவேளை, பொதுப் போக்குவரத்தில் 50 இருக்கைகளைக் கொண்ட பேருந்துகளில் 25பேர் மட்டும் பயணிப்பதற்கு நாங்கள் அறிவுரைகளை வழங்கி இருக்கிறோம். அதுவும் ஒவ்வொரு இருக்கைகளிலும் ஒருவர் மாத்திரம் இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறோம்.

முச்சக்கர வண்டிகளில் சாரதி உட்பட இருவர் மாத்திரம் செல்லவேண்டும். ஏனைய கார், வேன் போன்றவற்றில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவு இருக்க வேண்டும் என அறிவுரைகளை வழங்கி இருக்கின்றோம். குறிப்பாக மோட்டார் சைக்கிளில் கூட ஒருவரே பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.