சீருடையில் உள்ள பொலிஸ் அதிகாரியை தாக்க முடியுமா?

0

நபரொருவர் மீது பொலிஸ் அதிகாரி ஒருவரினால் காரணமின்றி தாக்குதலோ அல்லது அதிகாரத்தை பயன்படுத்தும் செயற்பாடோ இடம்பெற்றால் அது தொடர்பில் குறித்த நபருக்கு பொலிஸில், பொலிஸ் தலைமையகத்தில் அல்லது பொலிஸ் உயரதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்ய சந்தர்ப்பம் உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதேபோல், மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவும் அல்லது உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை வழக்கொன்றை தாக்கல் செய்யவும் முடியும் என அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு இன்றி சீருடையில் உள்ள பொலிஸ் அதிகாரிக்கு எதிராக செயற்பட முடியாது என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்கள் ஊடாக பகிரப்படும் தவறான தகவல்கள் தொடர்பில் விளக்கமளித்து அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த தினம் பன்னிப்பிட்டி பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் லொறி சாரதியொருவரை தாக்கும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது.

தனிப்பட்ட பாதுகாப்பிற்கான உரிமையைப் பயன்படுத்துவதற்கான அளவுகோல்கள் தண்டனைச் சட்டத்தின் 89 முதல் 99 வரையிலான பிரிவுகளில் உள்ளதாகவும், குறிப்பாக 92 மற்றும் 93 ன் பிரிவுகளில் உள்ள விதிகளின்படி தனிப்பட்ட பாதுகாப்புக்கான உரிமை பயன்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, 92, 93 மற்றும் 96 உட்பிரிவுகளில் குறித்த விடயங்கள் அடங்கியுள்ளதாகவும் எந்தவொரு சூழ்நிலையிலும் அரச ஊழியர் ஒருவர் தனது பதவியின் பெயரில் அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு எதிராக தனிப்பட்ட பாதுகாப்பிற்கான தனது உரிமையைப் பயன்படுத்த முடியாது எனவும் குறித்த உட்பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதனை தவறாக புரிந்துக் கொண்டு சீருடையில் உள்ள பொலிஸ் அதிகாரியை தாக்க முடியும் என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வரும் கருத்துக்கள் முற்றிலும் தவறானது என பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.