சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்க நடவடிக்கை!

0

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்கும் புதிய வழிமுறையொன்றினை   கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி  அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில்  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்களை தங்களது வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குறித்த நபர் உரிய விதிமுறைகளை பின்பற்றுகின்றாரா என்பதை கண்காணிக்கும் வழிமுறை  பல்வேறு கட்டங்களாக  நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த நிலையில், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களை காலை 6 மணி முதல் 11 மணி வரை  கண்காணிக்கும் பணியில்  பொது சுகாதார பரிசோதகர்கள் அல்லது சுகாதார அதிகாரிகள்  ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அத்துடன், முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளும், பிற்பகல் 4 மணி முதல் மறு நாள காலை 6 மணி வரை முப்படை அதிகாரிகளும் குறித்த கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுவதாகக் கண்டறியப்படுபவர்கள் தலைமை சுகாதார வைத்திய அதிகாரியினால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார் என கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி மேலும் தெரிவித்துள்ளது.