செலவினை ஈடுசெய்யும் வகையிலாவது எரிபொருள் – மின் கட்டணங்களை அதிகரிக்கவும் – மத்திய வங்கி ஆளுநர்

0

குறைந்தபட்சம் செலவினை ஈடுசெய்யும் வகையிலாவது எரிபொருள் மற்றும் மின்கட்டணங்களை அதிகரிக்குமாறு அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

நாணய சபை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் வலுசக்தி அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் தற்போது கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

தற்போது ஒக்டேன் 92 பெற்றோல் ஒரு லீற்றருக்கு கனியவள கூட்டுதாபனத்திற்கு 20 ரூபா நட்டம் ஏற்படுகின்றது.

ஒரு லீற்றர் ஒக்டேன் 95 ரக பெற்றோலுக்கு 16 ரூபா நட்டம் ஏற்படுகின்றது.

ஒட்டோ டீசல் ஒரு லீற்றருக்கு 54 ரூபாவும் சுப்பர் டீசல் ஒரு லீற்றருக்கு 35 ரூபாவும் நட்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் எரிபொருளை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் சதவீதம் அதிகரித்துள்ளமையினால் மின்சார சபைக்கும் நட்டத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.

ஒரு அலகு மின்சாரம் மின்சார சபையினால் 29 ரூபாவுக்கு உற்பத்தி செய்யப்படுவதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எனினும் மின்சாரம் ஒரு அலகுக்கு 16 முதல் 17 ரூபா மாத்திரமே அறவிடப்படுவதாக அதன் உயர் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

இந்தநிலையில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், சர்வதேச சந்தையுடன் ஒப்பிடுகையில் நாட்டில் குறைந்த விலையில் எரிபொருள் மற்றும் மின்சாரம் விநியோகிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

எரிபொருள் மற்றும் மின்சார கட்டணம் என்பவற்றை அதிகரிக்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.