ஜனாதிபதி கோட்டாக்கு அந்த அதிகாரம் இல்லை – அமைச்சர் பந்துல

0

அரசாங்கத்தின் கடன் வரம்பை அதிகரிக்க நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர விடுத்த வேண்டுகோளுக்கு பதிலளித்த அமைச்சரவை செய்தித் தொடர்பாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன, ஜனாதிபதிக்கு அவ்வாறு செய்ய அதிகாரம் இல்லை எனக் கூறினார்.

“ஒருங்கிணைப்பு நிதியில் இருந்து பணத்தைப் பெறுவதற்கான அதிகாரம், புதிய நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும், அரசியலமைப்பின் பிரகாரம் நிதி தேவைகள் அல்லது அரசிற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்ள ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு. எனவே, நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டவேண்டிய எந்த அவசியம் இல்லை” என கூறினார்.

“கடந்த நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கணக்கீட்டு சட்டமூலத்தின் பிரகாரம் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி நிதி அதிகாரம் உள்ளது. எனவே அரசாங்கத்தை கொண்டு நடத்துவதற்கான நிதிக்கு நாடாளுமன்ற ஒப்புதல் இல்லை என்றால், தேர்தல்களுக்குப் பின்னர் புதிய நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து பணத்தைப் பெற ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு” என குறிப்பிட்டார்.

ஒரு தேசிய பேரிடர் ஏற்பட்டால் அல்லது நாடு ஒரு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டால் மட்டுமே நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

2020 ஜனவரி 1 முதல் 2020 ஏப்ரல் 30 வரையிலான காலத்திற்கு கடந்த நாடளுமன்றத்தின் தீர்மானத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட கடன் வரம்பு 721 பில்லியன் ரூபாய் என்று முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.

மேலும்”இந்த கடன் வரம்பை அடைந்தவுடன், கடனை பெறுக்கொள்ளக்கூடிய சட்டப்பூர்வ அதிகாரம் இருக்காது. இதன் விளைவாக, இந்த நெருக்கடியை நிர்வகிக்க தேவையான நிதி திரட்டுவதில் அரசாங்கம் தீர்க்கமுடியாத சவால்களை எதிர்கொள்ளக்கூடும்.

இதேவேளை இந்த சட்ட சிக்கல்கள் காரணமாக, COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்காக உலக வங்கி வழங்கிய 128 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையினை பெற்றுக்கொள்வதில் சிக்கல் இருக்கும்” என்றும் அவர் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.