தமது நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் ஊக்கப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என பிரித்தானியாவும் கனடாவும் அறிவித்துள்ளதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்ட்டன் மற்றும் கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கிலன் ஆகியோர் கடந்த இரண்டு நாட்களுக்குள் சந்தித்து உரையாடியுள்ளனர் .
இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து தினேஷ் குணவர்த்தன குறித்த இரண்டு உயர்ஸ்தானிகரிடமும் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது தமது நாடுகளில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது என இரண்டு உயர்ஸ்தானிகளும் உறுதியளித்ததாக இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவித்திருக்கிறது.
கடந்த நவம்பர் 26 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய சின்னமாகக் கருதப்படும் கார்த்திகைப்பூ பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் காட்சிப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விடயமும் தினேஷ் குணவர்த்தனவினால் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பிரித்தானியாவிலும் கனடாவிலும் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்து அந்த அமைப்பு மீண்டும் எழுச்சி பெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்காக தினேஷ் குணவர்தன பிரித்தானிய மற்றும் கனேடிய உயர்ஸ்தானிகர்களிடம் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாகவும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு குறிப்பிட்டிருக்கிறது.