தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு புதுமுகங்களுக்கு மட்டக்களப்பில் வெற்றி உறுதி – ஆய்வில் தகவல்!

0

எதிர்வரும் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வெற்றி பெறும் கட்சிகளில் ஆசன ஒழுங்குகள் இறுதி நேர தேர்தல் முடிவுகளில் இவ்வாறு அமையலாம் என அரசியல் அவதானி கே.பி.டயஸ் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெற்று முடியவுள்ள தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பிக்களில் வன்னி மாவட்டத்தில் 2 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவரும், யாழ் – கிளிநொச்சி மாவட்டத்தில் 2, அம்பாறை மாவட்டத்தில் ஒருவர் என மொத்தம் 6 பேர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைவதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

பொதுத்தேர்தல் தொடர்பில் வடக்கு – கிழக்கின் கணிப்பீட்டு அறிக்கையிலேயே அரசியல் அவதானி கே.பி.டயஸ் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்முறை யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை போன்ற மாவட்டங்களில் மக்களின் அரசியல் ஈடுபாட்டையும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் கொள்கைகளையும் அடிப்படையாக வைத்து இக்கணிப்பை மேற்கொண்டுள்ளார்.

வன்னியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த தடவை 4 ஆசனங்களைப் பெற்றிருந்த போதிலும் இம்முறை 3 ஆசனங்களையும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளின் சார்பில் தலா ஒரு ஆசனம் வீதமும் தெரிவாகுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்.பிக்கள் இருவர் இம்முறை தோல்வியடைவார்கள் எனவும், முன்னாள் எம்.பிக்கள் இருவர் தெரிவாவதுடன் சென்ற முறை அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர் ஆகியோருடன் புதிய முகமான இளையவர் ஒருவர் தெரிவாகுவார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவாகுவாவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மூவர் தெரிவாகுவார்கள் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மீண்டும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த முறை அதி கூடிய வாக்கினைப் பெற்றவர் இம்முறையும் அதி கூடிய வாக்குகளுடன் நாடாளுமன்ற உறுப்பினராவதுடன் புதிய இரு முகங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகுவார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.