தமிழ் மக்களிடமிருந்து பிரிந்தார் பாடும்நிலா!

0

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் இன்று பிற்பகல் காலமானார்.

இது தொடர்பான தகவலை இன்று பிற்பகல் செய்தியாளர்களிடம் பேசிய அவரது மகன் எஸ்.பி. சரண், எஸ்.பி. பாடல் இருக்கும்வரை அவர் இருப்பார்.

நீங்கள் எல்லோரும் இருக்கும்வரை அவர் இருப்பார். எனது தந்தை உயிரிழப்பு தொடர்பான விரிவான தகவல்கள் இன்னும் சிறிது நேரத்தில் முழுமையாக வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எஸ்.பி.பி, தொடக்கத்தில் கவலைக்கிடமான நிலையில் இருந்து பிறகு வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு குணம் அடைந்து வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் உயிர்காக்கும் கருவிகளின் அதிகபட்ச உதவி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சிகிச்சைபெற்றுவரும் எம்.ஜி.எம். மருத்துவமனை தெரிவித்தது.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் எஸ்.பி.பி. அப்போது வீடியோ ஒன்றை வெளியிட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம், தான் நலமுடன் இருப்பதாகவும் யாரும் தொலைபேசியில் அழைத்து விசாரிக்க வேண்டாமென்றும் கூறியிருந்தார்.

அவருக்கு மிதமான அறிகுறிகளே இருந்த நிலையில், ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று இரவு அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர்காக்கும் இயந்திரங்கள் பொறுத்தப்பட்டன. இதற்குப் பிறகு அவரது உடல்நிலை சிறிது சிறிதாக மேம்பட்டது. அவருக்கு கொரோனா நெகடிவ் என வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

எஸ்.பி.பி குணமடைய வேண்டும் என அவரின் ரசிகர்களும், திரையுலக பிரபலங்கள் பலரும் கூட்டு பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.

தமிழ் திரைப்பட உலகை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், ஹிந்தி மற்றும் தெலுகு திரைப்படத்துறையினரும் எஸ்.பி.பி குணமடைய வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

ஆந்திர மாநிலம், நெல்லூரில் பிறந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம், 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். அவருக்கு வயது 74.