தமிழ் மக்களின் சொத்த காணிக்குள் செல்ல முயன்ற விவசாயிகளை அடித்துதுரத்திய பிக்கு!

0

தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வரும் ஆயிரம் ஏக்கர் காணிக்குள் செல்ல கிழக்கு தொல்பொருள் செயலணி உறுப்பினரான பிக்கு ஒருவரால் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

திருகோணமலை – குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திரியாய்க் கிராமத்திலேயே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆத்திக்காடு, நீராவிக்கண்டல், பள்ளப்பாவங்கை, பட்டாணிபாதி, பாவலங் கண்டல், கந்தப்பன் வயல் ஆகிய வயல் காணிகள் புதைபொருள் சார்ந்த இடங்கள் என்பதாகக் கூறி இந்த முறை பெரும் போகச் செய்கைக்கு மேற்படி வயல்காரர் இறங்கக்கூடாது.

இறங்கினால் அனைவரையும் சிறையில் அடைப்பேன் என்று அரிசிமலைப் பிக்கு கூட்டம் போட்டு விவசாயிகளை மிரட்டியுள்ளார். மிரட்டிய பிக்கு ஜனாதிபதியால் நிறுவப்பட்ட கிழக்கு தொல்பொருள் செயலணியின் உறுப்பினர் ஆவார்.

பிக்குவின் மிரட்டலால் அச்சமடைந்த வயல் சொந்தக்காரர் தமது வயல்களுக்குச் செல்லாமல் உள்ளனர்.

விவசாயிகள் வயல் செய்வதற்கு யாரும் தடைவிதிக்க முடியாது என்பதை வலியுறுத்தும் ஒரு சந்திப்பு திருகோணமலை அரசாங்க அதிபர் அசங்க அபயவர்த்தனவுக்கும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அவரது செயலாளர் க.ச.குகதாசன் ஆகியோருக்கும் இடையே நேற்று நடைபெற்றது.
எதிர்வரும் புதன்கிழமை குச்சவெளிப் பிரதேச செயலாளர் பணிமனையில் அனைத்து தரப்பினர்களையும் உள்ளடக்கிய ஒரு கூட்டம் நடத்துவதாகவும் அதில் இச்சிக்கலுக்குத் தீர்வு காணப்படுவதாகவும் முடிவு செய்யப்பட்டது.