தற்கொலை குண்டுதாரி சாராவின் மரபணு அறிக்கையை மீண்டும் ஆராய நீதிமன்றம் உத்தரவு!

0

சாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரனின் மரபணு பரிசோதனை அறிக்கையினை மீண்டும் ஆராய்ந்து  மன்றிற்கு சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளது.

குறித்த வழக்கு விடயம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்று (திங்கட்கிழமை) கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.என்.ரிஸ்வானின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.

இதன்போது, நீதிமன்றத்திற்கு சாய்ந்தமருது தற்கொலை குண்டுதாரி என அறியப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரனின் தாயார் வருகை தந்திருந்தார்.

இதன்போது, கொழும்பில் உள்ள அரச பகுப்பாய்வுப் பிரிவிற்கு அவரை அழைத்துச் சென்று மரபணு பரிசோதனை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில், மேற்குறித்த விடயம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்காக மேலதிக அறிக்கைகளை தாக்கல்செய்து  மீண்டும் சந்தேகநபரான புலஸ்தினி மகேந்திரனின் தாயாரை அழைத்துச்செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கடந்தகால விசாரணைகளில் சாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட சாரா என்ற புலஸ்தினியின் மரபணு பரிசோதனை ஒத்துப்போகவில்லை என மன்றில் அம்பாறை விசேட குற்றவியல் பிரிவின் அதிகாரி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.