தலைவர் பதவியில் இருந்து விலகல் – ரணில் அதிரடி முடிவு

0

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக ரணில் விக்ரமசிங்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறும் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்குப் பின்னர் புதிய தலைவர் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அகிலவிராஜ் கரியவாசம் தெரிவித்துள்ளார்.

எனவே கட்சியின் தலைமை பதவிக்காக ரவி கருணநாயக்க, தயா கமகே, அகில விராஜ் காரியவசம், வஜிர அபேவர்தன ஆகியோர் கட்சியின் உறுப்பினர்களினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்ப்பிக்க கருத்து தெரிவித்த அகிலாவிராஜ் காரியவசம், “இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். இந்தக் கூட்டத்தில் பொதுத் தேர்தலில் கட்சி அடைந்த பாரிய பின்னடைவு தொடர்பாகவே ஆராயப்பட்டது.

நாம் எதிர்க்காலத்தில் பிழைகளை திருத்திக் கொண்டு, சக்திமிக்கதொரு பயணத்தை மேற்கொள்வோம் என உறுதியாக நம்புகிறோம். அதேநேரம், கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாகவம் இதன்போது ஆராயப்பட்டது.

அந்தவகையில், ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைமையிலிருந்து வெளியேறுவதாக இன்று அறிவித்துள்ளார். கட்சிக்கு புதிய தலைவர் ஒருவரை நியமிக்க அனைவரது ஆலோசனைகளும் இதன்போது பெற்றுக் கொள்ளப்பட்டது.

அந்தவகையில், கட்சித் தலைமைக்காக நான்கு பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இவர்கள் தொடர்பாக எதிர்வரும் புதன்கிழமை கட்சித் தலைமையுடன் மீண்டும் பேசி, மத்தியக் குழுவுக்கு இறுதி முடிவை அறிவிக்கவுள்ளோம்.” என கூறினார்.