தீபாவளியை முன்னிட்டு சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள சுகாதார பரிந்துரைகள்!

0

எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயில்கள், சமூகங்கள் அல்லது பெருந்தோட்டங்களில் விழாக்கள் நடத்தக்கூடாது என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

தீபாவளியை எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்து இந்து மதத் தலைவர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் உள்ளிட்ட இந்து சமூகத்திற்கு சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தீபாவளி கொண்டுவரும் நல்ல உணர்வுகளைப் பாதுகாக்க, இந்த காலத்தில் எந்த இந்து அடியாரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகக்கூடாது என்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சின் செயலாளர் விராஜ் அபேசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தீபாவளி வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் தொலைபேசிகளின் ஊடாக பகிர்ந்துக்கொள்ளலாம். இதனை விடுத்து நேரடியாக கைக்குலுக்குதல் உட்பட்ட விடயங்கள் தவிர்க்கப்படவேண்டும்.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய இடங்களில் பரவியுள்ள கொரோனா ஏனைய இடங்களுக்கும் பரவிவிடக்கூடாது என்பதில் கவனமாக நடந்துக்கொள்ளவேண்டும்.

எனவே அவரவர் தமது வீடுகளில் இருந்து தீபாவளியை கொண்டாட வேண்டும். ஒன்றுக்கூடுவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும். சுற்றுலாக்களை தவிர்த்து வீடுகளிலேயே தீபாவளியை கொண்டாடவேண்டும்.

அத்துடன் சிகரட் மற்றும் மதுபானம் உட்பட்ட கேளிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடாது என்றும் அமைச்சின் செயலாளர் கோரியுள்ளார்.

இதேவேளை தீப்பற்றக்கூடிய தன்மைக்கொண்ட மதுசாரம் உள்ளடங்கிய கை சுத்திகரிப்பு பதார்த்தங்களை பயன்படுத்திய பின்னர் அவற்றை திறந்தநிலையில் தீப்பிழம்புகளுக்கு அருகில் வைக்கவேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.