தீர்மானம் மிக்க தருணத்தில் ஒத்த கருத்துடைய சிலர் ஒன்றிணைவார்கள்: சுசில் பிரேமஜயந்த

0

 தீர்மானம் மிக்க தருணத்தில் ஒத்த கருத்துடைய சிலர் ஒன்றிணைவார்கள் என கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஜனாதிபதியினால் இன்று (04) இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவ்வாறு குறிப்பிட்டார்.

நியாயமான விமர்சனங்களைக் கூட தாங்கிக்கொள்ள முடியாவிட்டால் நாட்டை அபிவிருத்தியினை நோக்கி கொண்டு செல்வது சிரமமானது என இராஜாங்க அமைச்சில் இருந்து வௌியேறுவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவித்தார்.

கல்வி சீர்சிருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக செயற்பட்ட கலாநிதி சுசில் பிரேமஜயந்தவை அந்த பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று காலை அறிவித்தது.

ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது .

ஊடகங்கள் மூலம் இது குறித்து அறிந்துகொண்ட கலாநிதி சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சிற்கு சென்று தனது அலுவலகத்தையும் அங்கிருந்த பொருட்களையும் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

அதன் பின்னர், பதவி நீக்கம் என்பது தனக்கு பெரிய விடயமல்ல எனவும் தமக்கு தொழில் ஒன்று இருப்பதால், சட்டத்தரணியான தாம் மீண்டும் நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

விவசாயத்துறையும் கொள்கை ரீதியிலான தீர்மானங்களும் தோல்வியடைந்துள்ளதாக ஊடகவியலாளர்களிடம் கூறியதால் தாம் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கக்கூடும் என சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.