நள்ளிரவில் அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்தான ராஜபக்சக்களின் ஒப்பந்தம்

0

முறையான விலைமனுகோரல் இல்லாமல் கெரவலபிடிய மின்னுற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். ராஜபக்ஷர்கள் முறையற்ற செயற்பாடு நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பெறும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

முறையான பொருளாதார முகாமைத்துவம் இல்லாததன் காரணமாக தேசிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கான தேசிய வருமானம் 4 பில்லியனாக காணப்படும் போது, அரச செலவினம் 14 பில்லியனாக காணப்படுகிறது. இந்நிலை தொடருமாயின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும்.

நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கும், தேசிய பாதுகாப்பிற்கும் வலு சக்தி முக்கியமானது.இத்துறை அரசுக்கு சொந்தமாக காணப்பட வேண்டும்.

அமெரிக்க குடியுரிமையினை கொண்ட நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ கெரவலபிடிய அனல் மின்நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தீர்மானித்து , அமைச்சரவை அனுமதியையும் வாய்மூல விளக்கப்படுத்தலுடன் பெற்றுக் கொண்டுள்ளார்.