நாடளாவிய ரீதியில் மீண்டும் அமுலானது ஊரடங்கு…..

0

கடந்த திங்கட்கிழமை 21 மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) இரவு முதல் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு, 21 மாவட்டங்களில் அண்மையில் தளர்த்தப்பட்டிருந்தது.

தினமும் அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படுகின்ற ஊரடங்கு இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தநிலையிலேயே கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களிலும் இன்று காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம், மீளவும் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இவ்வாறு அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் தளர்த்தப்படும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோன்று கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு எதிர்வரும் 27ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் குறித்த ஊரடங்கு உத்தரவு மேலும் சில நாட்களுக்கு நீடிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக நாடளாவிய ரீதியில் மீண்டும் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்த முக்கிய உயர்மட்ட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் கோரிக்கைக்கு அமைய நாடளாவிய ரீதியில் ஊரங்கு சட்டம் நீடிக்கப்படும் என கூறப்படுகின்றது.

இதுகுறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியிடப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.