நாடு திரும்பியுள்ளார் புலஸ்தினி? அரசாங்கம் தீவிர விசாரணை

0

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடரின் போது நீர்கொழும்பு,கட்டுவபிட்டிய தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரியின் மனைவி நாடு திரும்பியதாக கூறப்படுவது குறித்து விசாரணைகளை நடத்துமாறு குற்றப்புலனாய்வுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு இதற்கான உத்தரவை விடுத்துள்ளது.

புலஸ்தினி ராஜேந்திரன் என்ற சாரா என்பவரே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் இந்தியாவுக்கு கடல் வழியாக தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அவர் பின்னர் இலங்கைக்கு கடல் வழியாக திரும்பி மன்னார்,புத்தளம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தங்கியிருந்ததாக புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை ,உயர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்படுவதில் இருந்து தப்பியவர்கள், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் உள்ளவர்கள் மற்றும் ஆதாரங்கள் இல்லாததால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களை சாரா தொடர்பு கொண்டதாக ஆணையக்குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.