நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு – மக்கள் அவதி!

0

நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகின்றமையால் மாற்று வழிகள் இன்றி நுகர்வோர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறை காரணமாக லாஃப்ஸ் நிறுவனம் எரிவாயு இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளமையை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்தமையை அடுத்து இலங்கையிலும் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தன.

எவ்வாறிருப்பினும்  எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்படவில்லை.

மேலும் டொலர் பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில் கடன் உறுதி கடிதத்தை திறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமையினால், லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் இறக்குமதி செய்வதில் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாக அறிவித்திருந்தது.

இதனையடுத்து, லாஃப்ஸ் நிறுவனம் எரிவாயு இறக்குமதியை நிறுத்துவதற்கு தீர்மானித்தால், அதற்கான கேள்வியை நிரப்புவதற்கு லிட்ரோ நிறுவனத்திற்கு முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடாக கடந்த ஜூலை 20ஆம் திகதி அறிவித்திருந்தார்.

எனினும், லாஃப்ஸ் எரிவாயுக்கு பதிலாக லிட்ரோ எரிவாயு கொள்கலனை விநியோகிக்குமாறு நிறுவனத்திடமிருந்து தமக்கு அறிவிக்கப்படவில்லையென லிட்ரோ விநியோக முகவர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.