படுகொலையாளி பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டது மனிதாபிமானத்தினை மதிக்கும் எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று -இரா.சாணக்கியன்

0

மிருசுவிலில் இரண்டு சிறுவர் உற்பட எட்டுத் தமிழர்களின் கொடூர படுகொலைக்கு காரணமாக இராணுவ அதிகாரியினை பொது மன்னிப்பின் அடிப்படையில் ஜனாதிபதி விடுதலைசெய்த செயற்பாடு என்பது மனிதாபிமானத்தினை மதிக்கும் எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமான இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மிருசுவிலில் இரண்டு சிறுவர் உற்பட எட்டுத் தமிழர்களின் கொடூர படுகொலைக்கு காரணமாக இருந்து கடந்த நல்லாட்சியில் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவை பொதுமன்னிப்பின் அடிப்படையில் ஜனாதிபதி விடுவித்த செய்தியானது தமிழ் மக்கள் மட்டுமன்றி மனித உரிமையினை கடைப்பிடிக்கும் அனைவருக்கும் பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நாட்டில் தமிழ் சமூகத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளுக்கு நியாயமான தீர்வினையும் நீதியையும் வழங்குமாறு தொடர்ச்சியான வலியுறுத்தல்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துவருகின்றது.

இதன் ஒரு கட்டமாக பொறுப்புக்கூறல் நிகழாமை போன்றவற்றினை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசாங்கம் நீதியை வழங்கவேண்டும் என ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் தொடர்ச்சியான வலியுறுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டுவந்தன.

இவ்வாறான நிலையில் மிருசுவிலில் இரண்டு சிறுவர் உற்பட எட்டுத் தமிழர்களின் கொடூர படுகொலைக்கு காரணமாக இருந்து குற்றம் நிறூபிக்கப்பட்டு கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்ட நடவடிக்கையானது வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய விடயமாகும்.

சிறைச்சாலையில் தனது இனத்திற்காக போராடிய நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒருவரைக்கூட விடுதலைசெய்வதற்கு நடவடிக்கையெடுக்காத ஜனாதிபதி அவர்கள்,தமிழ் மக்களை கொன்றவர் என்ற குற்றச்சாட்டினை நிரூபிக்கப்பட்ட ஒருவரை விடுதலைசெய்த சம்பவமானது இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கான விடுதலையினை மீண்டும் வெளிக்காட்டி நிற்கின்றது.

இவர்களின் இவ்வாறான பொய் முகங்கள் காரணமாகவே நான் கடந்த காலத்தில் இவர்களிடம் இருந்துவிலகி தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து எனது பணியை முன்னெடுத்துவருகின்றேன்.இதேபோன்று இவர்களுக்கு முட்டுக்கொடுப்பவர்களினால் எதனையும் செய்யமுடியாது என்பதே உண்மையான நிலைப்பாடாகும்.

நல்லாட்சியின்போது ஆட்சியை திட்டமிட்டு கவிழ்த்து வேறு அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டபோது அந்தவேளையில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்யப்போவதாக படம் காட்டியவர்கள் இன்று எதனையும் செய்யமுடியாத கையாலாகத நிலையில் உள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அழுத்தங்கள் மற்றும் முட்டுக்கொடுப்புகள் காரணமாக கடந்த நல்லாட்சி காலத்தில் சில தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைசெய்யப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் தொடர்பிலான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டதுடன் ஒரு சிலருக்கு தண்டனைகளும் வழங்கப்பட்டன.

ஆனால் இன்று கொரனா அபாயம் நிலவிவரும் இக்காலப்பகுதியில் மிகவும் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்ட இந்த இராணுவ அதிகாரியின் விடுதலை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.