பட்டிருப்பு தொகுதி மக்கள் நட்டாற்றில் – இரா.சாணக்கியன்

0

பட்டிருப்பு தொகுதி முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் பூ.கணேசலிங்கம் அவர்களின் திருவுருவச் சிலை திரைநீக்க விழாவும் சிறப்பு மலர் வெளியீடும் மட்டக்களப்பு பெரிய கல்லாறு பொது நூலக வளாகத்தில் இன்று 06.02.2020ம் திகதி பா.இன்பராசாவின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு மலரின் முதற் பிரதியை பெற்றுக்கொண்ட இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளார் இரா.சாணக்கியன் நிகழ்வு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

அமரர். கணேசலிங்கம் ஐயா அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் தமிழர்களின் உரிமையினை பெறுவதற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் அதுமட்டுமன்றி பட்டிருப்பு தொகுதி மக்கள் மட்டுமன்றி முழு மாவட்டத்திற்குமே சிறந்த அபிவிருத்தி பணியினை மேற்கொண்டமை அனைவரும் அறிந்த விடயம்.

அபிவிருத்தியினை மட்டும் நோக்காக கொள்ளாமல் உரிமை மற்றும் அபிவிருத்தியினையும் சமாந்தரமான பாதையில் பெறவதற்கு உழைத்தவர். அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக இருந்து அரசியல் பயணத்தை தொடர்ந்திருந்தாலும் பின்னர் அக்கட்சியினுடைய கொள்கையை கண்டும், தமிழ் மக்களின் உரிமைக்கு தடையினை ஏற்படுத்துகின்றது மட்டுமல்லாமல் இக்கட்சியினூடாக தமிழ் மக்களின் உரிமையினை பெற்றுக்கொள்ள முடியாது, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை கருத்திற்கொண்டு தமிழரசு கட்சியில் இணைந்து அக்கொள்கையில் இறுதி வரைக்கும் பயணித்தவர். பட்டிருப்பு தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியின் தலைவருமான சி.மூ.இராசமாணிக்கம் ஐயாவின் 1974ம் ஆண்டு மறைவுக்குப் பின்னர் தமிழரசு கட்சிக்கு பட்டிருப்பு தொகுதியில் ஏற்பட்ட விழுக்காட்டினை சரிசெய்தவர் கணேசலிங்கம் ஐயா.

பின்னர் மண்டூர் ஓட்டுத்தொழிற்சாலை, படுவான்கரைக்கு மின்சாரம் என பல்துறைகளிலும் அபிவிருத்திகளை மேற்கொண்டவர். சி.மூ.இராசமாணிக்கம் ஐயாவின் காலத்தில் அவருக்கு எதிராக கணேசலிங்கம் ஐயா செயற்பட்டிருந்தாலும் கூட பின்னர் இராசமாணிக்கம் ஐயாவின் திருவுருவச் சிலையை நிர்மாணிப்பதில் முன்னோடியாக திகழ்ந்தவராவர் ,
அதுபோலவே தான் நானும் அரசியற் பிரவேசம் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியினூடாக அறிமுகமாகியிருந்தாலும் அக்கட்சியில் இருந்து தமிழ் மக்களுக்கு எந்தவிதமான உரிமையினையும் பெற்றுக்கொள்ள முடியாது என அறிந்து பின்னர் தமிழரசு கட்சியின் கொள்கைகளை ஏற்று தமிழ் மக்களின் உரிமையுடன் கூடிய அபிவிருத்தியையும் பெறவேண்டும் என எனது அப்பப்பாவான சி.மூ.இராமாணிக்கம் வழிதோன்றலான நான் தமிழரசு கட்சியின் கொள்கையில் பயணித்து கொண்டிருக்கின்றேன்.

2015இற்குப் பின்னர் பட்டிருப்பு தொகுதி மக்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர் இல்லாமல் தற்போதும் நட்டாற்றில் துடுப்பிழந்த படகைப் போல் பயணித்து கொண்டிருக்கும் இத்தொகுதி மக்களுக்காக நான் தமிழரசு கட்சியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புகின்றேன். கணேசலிங்கம் ஐயாவின் அரசியற் பிரவேசமும் எனது அரசியற் பிரவேசமும் சுதந்திரக் கட்சியூடாக இருந்தாலும் எனது அரசியற் பின்ணணி தமிழரசு கட்சியாகும்.

குறுகிய காலத்திற்குள் ஏற்பட்ட தவறின் காரணமாக மாற்றுக்கட்சியினூடாக ஏற்பட்டதை எண்ணி மன வேதனையடைகின்றேன்.

பட்டிருப்பு தொகுதி மக்கள் மட்டுமன்றி முழு மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினூடாக பல்தரப்பட்ட உதவிகளை செய்து கொண்டிருக்கின்றேன் எனவும்,
இந்த மலர் வெளியீட்டை இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினூடாக செய்து வைப்பதில் பெருமகிழ்ச்சியையும் அடைகின்றேன் எனவும் தெரிவித்தார்.