பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

0

பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமூலம் வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸினால் இன்று (10) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

நாளை (11) பாராளுமன்றத்தில் சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் போது அது தொடர்பான விமர்சனங்களை முன்வைக்குமாறு பேராசிரியர் G.L.பீரிஸ் கேட்டுக்கொண்டார்.

எனினும், தடுப்புக் காலத்தை 18 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக குறைப்பது மாத்திரம் தீர்வாக அமையாது எனவும் இந்த திருத்தத்தால் எவ்வித மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் M.A.சுமந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை, கம்பளையில் இன்று (10) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த நீதி அமைச்சர் அலி சப்ரியிடம், பயங்கரவாத தடை சட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

இதன்போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைக்காக அல்லாமல், நாட்டின் சமுதாயத்திற்கு உதவி செய்வதற்காக பயங்கரவாத திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொண்டதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.