பழைய நாடாளுமன்றை கூட்டும் அதிகாரம் எனக்கு இல்லை – ஜனாதிபதி!

0

தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தும், ஸ்தீரமான பொருளாதாரக் கொள்கையொன்றை உருவாக்கும் காலம் இலங்கையில் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொரோனா வைரஸை பரவலினால், பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்றது.

ஜனாதிபதியின் முதன்மை ஆலோசகர் லலித் வீரதுங்கவுடன் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த விடயத்தினை சுட்டிக்காட்டினார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டின் தற்போதைய நிலவரம் காரணமாக கால வரையறையன்றி தேர்தலை ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருந்தது.

அரசமைப்பிற்கு இணங்க, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்களில் புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும்.

குறித்த காலத்திற்குள் அரசமைப்பை மீறி நாடாளுமன்றைக் கூட்டும் அதிகாரம் எனக்கில்லை. அரசமைப்புக்கு மீறிய எந்தவொரு செயற்பாட்டையும் என்னால் மேற்கொள்ள முடியாது.

எந்தக் காரணம் கொண்டும், பழைய நாடாளுமன்றை கூட்டும் அதிகாரம் எனக்கு இல்லை. நாம் தற்போது எமது நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக விசேடமாக சிந்திக்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம்.

இதற்கு மீளவும் உயிர்க்கொடுக்க வேண்டும். பெரிய- நடுத்தர வியாபாரம், ஆடைத்தொழில், ஏற்றுமதி வர்த்தகம் என அனைத்தும் இன்று கொரோனா வைரஸின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.

எனினும், புதிய பொருளாதார திருத்தமொன்றை மேற்கொள்ள இது எமக்கு கிடைத்த சிறந்ததொரு சந்தர்ப்பமாகவே நான் கருதுகிறேன். தேசிய பொருளாதார கொள்ளையொன்றை ஸ்தாபிக்க எமக்கு இன்று வாய்ப்பு கிடைத்துள்ளது.

கடந்த காலங்களில், எமது நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களைக்கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தமையினால், எமது நாட்டின் தேசிய உற்பத்தி பாரிய பின்னடைவை எதிர்நோக்கியிருந்தது.

விவசாயிகளில் வாழ்வாதாரம் தொடர்பாக பேசப்பட்டாலும், அதனை வலுப்படுத்துவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்பதுதான் உண்மையாகும்.

எனவே, இந்த காலத்தில் இதனை உறுதிப்படுத்த புதிய தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்த வேண்டும். தேசிய பொருளாதார கொள்கையையே மாற்ற வேண்டும். இதன் ஊடாக மட்டுமே பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.