பாடசாலை சீருடை மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கான சீருடை ஆகியவற்றைத் தயாரிக்கும் நடவடிக்கையில் பெருமளவான வீதத்தை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி ஆராய்ந்து வருகின்றார்.
இவற்றைத் தயாரிப்பதற்கான பொருட்களை உள்நாட்டிலே உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பை அண்மித்த பகுதிகளிலுள்ள ஆடை உற்பத்தி நிறுவனங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (திங்கட்கிழமை) சென்று பார்வையிட்டிருந்தார்.
இந்நிலையில், அந்த விஜயம் தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே ஜனாதிபதி இவ்வாறு வலியுறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, பாடசாலை சீருடைக்கான கூப்பன் முறைமை அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக பெரிய அளவிலான மூலதனத்துடன் ஆரம்பிக்கப்பட்ட துணி உற்பத்தி நிறுவனங்கள் பல மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாக உற்பத்தியாளர்கள் இதன்போது ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.
அத்துடன் பெருமளவானவர்கள் தொழிலை இழக்க நேரிட்டுள்ளதெனவும் ஜனாதிபதியிடம் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதேவேளை, உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதன் ஊடாக இறக்குமதி செலவில் 68 வீதத்தினை மீதப்படுத்த முடியும் என ஜனாதிபதி உற்பத்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், உள்ளூர் உற்பத்திகளை வாங்குவதன் மூலம் கல்வி அமைச்சினால் ஆண்டுக்கு 80 மில்லியன் ரூபாய் பணத்தை சேமிக்க முடியுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று தேசிய கொடி மற்றும் பௌத்த கொடிகளை இறக்குமதி செய்வதையும் உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இவற்றைத் தயாரிப்பதற்கான பொருட்களை உள்நாட்டிலே உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.