பா​ர்வை இழந்த தமிழ் மாணவன் சிங்கள பிரெய்லில் சித்தி

0

பார்வையை முழுமையாக இழந்த தமிழ் மாணவன், சிங்கள ப்ரெயில் முறைமையின் ஊடாகப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்தமை யாவரையும் கவர்ந்திருக்கும் செய்தியாகும்.

கேகாலை, அம்பன்பிட்டிய விசேட மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு சித்தியடைந்துள்ளார் என அவ்வித்தியாலயத்தின் அதிபர் புத்திக விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

கேகாலை, ஹமுதுகலையை வசிப்பிடமாகக் கொண்ட ஷெலின் என்பவர், 2009 ஜனவரி 2ஆம் திகதியன்று பிறந்தார்.

இவருக்கு அக்காவும் தப்பி​யும் இருக்கின்றனர். இவருடைய தந்தை மகேந்திரன் ராஜா, தயார், தேவி மனோகரி ஆவார்.

ஷெலின் நோய்வாய்ப் பட்டிருந்தமையால் இரண்டு கண்களும் பார்வையை இழந்திருந்தன. கொழும்பு கண் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று, எவ்விதமான பயனும் கிடைக்கவில்லை.

“அந்த வித்தியாலயத்திலிருந்து இம்முறை பரீட்சைக்கு தோற்றிய ஒரேயொரு மாணவர் ஷெலின் ஆவார்.

அவருக்கு, இரண்டு கண்களின் பார்வையையும் இழந்த பட்டதாரியான சிரில் ஜயவிக்ரம என்பவரே கற்றுக்கொடுத்துள்ளார்” என அதிபர் தெரிவித்தார்.

“எங்களுக்குத் தமிழ் மொழியை விடவும் சிங்கள மொழி நன்றாகத் தெரியும். குடும்பத்தினருக்கும் சிங்களம் நன்றாகத் தெரியும்.

மூத்த பிள்ளை, கேகாலை ​சாந்த மரியா தமிழ் வித்தியாலயத்தில் பயின்றாள், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு தெரிவானாள்.

எனினும், சிறிய தவறால் பல்கலைக்கழகத்துக்குள் செல்லமுடியவில்லை” என ஷெலினின் தாய் தெரிவித்தார்.

“முதலாவது வினாத்தாள் கடினமாக இருந்தது. இரண்டாவது வினாத்தாள் மிகவும் இலகுவாக இருந்தது. எங்களுடைய பாடசாலைக்கு ப்ரெய்ல் இயந்திரம் இல்லை.

யா​ராவது வாங்கித் தருவார்களாயின் சந்தோஷம்” எனத் தெரிவித்த ஷெலின், “நன்றாகப் படித்து, என்னைப்போன்ற பார்வையை இழந்த மாணவர்களுக்கு கற்பிப்பேன்” என்றார்.