பி.சி.ஆர் சோதனைகளை நடத்துவதில் படிப்படியாக சரிவு ஏற்பட்டு வருகிறது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

0

இலங்கையின் சுகாதார அமைச்சு வெளியிடும் நாளாந்த அறிக்கையின்படி, பி.சி.ஆர் சோதனைகளை நடத்துவதில் படிப்படியாகச் சரிவு ஏற்பட்டு வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனல் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,

பி.சி.ஆர் சோதனைகளை நிலையான விகிதத்தில் நடத்துவது மிகவும் அவசியம் என்று தமது சங்கம் முன்பே சுட்டிக்காட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதில் முக்கியமானது, எழுந்தமான பி.சி.ஆர் சோதனைகளைத் தொடர்ந்து நடத்துவதே ஆகும், அதற்காக ஒரு நிலையான எண்ணிக்கை ஒதுக்கப்பட வேண்டும் என்று பெர்னாண்டோ கூறியுள்ளார்.

தற்போதைய நிலைமையில் பி.சி.ஆர் சோதனைகளின் வீழ்ச்சி கோவிட் பரவலில் ஒரு பச்சை விளக்காக இருக்காது. துல்லியமான தரவை உருவாக்காமை காரணமாகவே நாட்டில் பரவும் வைரசின் உண்மை தோற்றத்தை அடையாளம் காட்ட முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, பி.சி.ஆர் சோதனைகளை நிலையான முறையில் நடத்துமாறு சுகாதார அமைச்சகத்திடம் கோருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.