புதிய அரசியலமைப்பை ஸ்தாபிக்க அனைவரது ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படும் – மஹிந்த

0

புதிய அரசியலமைப்பொன்றை ஸ்தாபிக்க, கட்சி பேதங்களைக் கடந்து அனைவரது ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படும் என இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “50 வருடங்களுக்கு முன்னர், நாமும் இதேபோன்று ஒரு செயலமர்வில் இளைய நாடாளுமன்ற உறுப்பினர்களாக கலந்துகொண்டிருந்தமை எனக்கு நினைவுக்கு வருகிறது.

இது ஒரு நடைமுறையாக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஒரு வரலாறாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அத்தியாவசியமாகும்.

இதுதொடர்பான புரிந்துணர்வை நாடாளுமன்றுக்கு உள்ளேதான் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த புரிந்துணர்வுதான் உறுப்பினர்களை முன்னோக்கி பயணிக்க வழிவகை செய்யும்.

புதிய உறுப்பினர்கள் பலர் இன்று நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். புதியவர்கள் வருவதை நாம் மகிழ்ச்சிகரமாக வரவேற்கிறோம். இவர்கள்தான் நாட்டின் எதிர்கால தலைவர்களாக வரப்போகிறார்கள்.

கடந்த தேர்தலை யாரும் மறந்துவிடப்போவதில்லை. எமது தரப்புக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைக் கிடைத்ததோ அல்லது இலங்கையின் பழைய கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு ஆசனம்கூட கிடைக்காததோ இங்கு விசேடமானது அல்ல.

ஆனால், இந்த தேர்தல் ஊடாக ஒரு பாடத்தை மக்கள் எமக்கு கற்பித்துள்ளார்கள் என்பது மட்டும் உண்மையாகும்.

71 வீதமான மக்கள் வாக்களித்துள்ளார்கள். இது எதிர்காலத்திற்கு விடுக்கப்பட்ட ஒரு சமிக்ஞையாகவே நாம் கருதுகிறோம்.

நாட்டு மக்கள், ஜனநாயகத்திற்கும் முறையான வேலைத்திட்டத்திற்கும் ஆதரவானவர்கள் என்பதை காண்பித்துள்ளார்கள். வேலை செய்யாதவர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளார்கள். நாட்டுக்கு ஆதரவில்லாதவர்களை நிராகரித்துள்ளார்கள்.

இதேபோன்றுதான் மக்கள் எதிர்காலத்திலும் செயற்படுவார்கள் என்று நாம் கருதுகிறோம். பெரியவர் – சிறியவர் என்று பார்க்காமல், புதியவரா- அனுபவசாளியா என்று பார்க்காமல், மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.

மக்களை பொறுத்தவரை, மக்களுக்கான சேவை செய்யத் தகுதியற்றவர்களை, அவர்கள் நிராகரிப்பார்கள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இதுதான் மக்களுக்கான அரசியல். நாம் என்றும் மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். இதனை புதிய உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

நாடாளுமன்றை பொறுத்தவரை, உறுப்பினர்கள் அனைவரும் சிறந்த மக்கள் பிரதிநிதியாக இருக்க வேண்டும். இதனை புறக்கணிப்பவர்களுக்கு அரசியல் எதிர்காலமொன்று இருக்காது.

எமக்கு அரசியல் பழிவாங்களில் ஈடுபட தற்போது நேரமில்லை. இதற்காக மக்கள் எமக்கு ஆணையும் வழங்கவில்லை.

நாட்டுக்கு புதிய அரசியலமைப்பொன்றை ஸ்தாபிக்கவே மக்கள், இந்தத் தேர்தலில் எமக்கு ஆணை வழங்கியுள்ளார்கள்.

எனவே, இதனை நாம் முதலில் நிறைவேற்ற வேண்டும். அரசியலமைப்பு என்பது ஒரு தரப்புக்கு மட்டும் உரித்தானது அல்ல.
உண்மையில் இதன் ஒவ்வொரு சரத்தும், எமது வாழ்க்கையை தீர்மானிக்கும்.

எனவே, இதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும், கட்சி பேதங்களைக் கடந்து தேவைப்படுவது எமது அரசியல் பொறுப்பாக உள்ளது. இதுதான் மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.