பெருந்தொற்றைக் கையாள புதிய சர்வதேச உடன்படிக்கைக்கு தயாராகும் WHO உறுப்பு நாடுகள்

0

அடுத்த பூகோள பெருந்தொற்றைக் கையாள்வது தொடர்பிலான புதிய சர்வதேச உடன்படிக்கையை உருவாக்கும் நடவடிக்கையை உலக சுகாதார ஸ்தாபனத்தின் உறுப்பு நாடுகள் ஆரம்பித்துள்ளன.

ஜெனிவாவில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் உறுப்பு நாடுகள், புதிய உடன்படிக்கையை உருவாக்கும் தீர்வுத் திட்டத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.

அரசாங்கங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை அமைப்பொன்றை உருவாக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் இடம்பெறும் வருடாந்த கூட்டத்தொடரில் இந்த திட்டம் தொடர்பிலான முன்னேற்ற அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதனிடையே, முழுமையாக தடுப்பூசியை பெறாத, நோய்வாய்ப்பட்டுள்ளவர்கள் பயணங்களை பிற்போட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.

60 வயதிற்கு மேற்பட்ட இருதய நோய், நீரிழிவு மற்றும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரோன் பிறழ்வு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை வௌியிட்டுள்ள புதிய பயண கட்டுப்பாடுகளில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளில் முதலாவது ஒமிக்ரோன் தொற்று சவுதி அரேபியாவில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒமிக்ரோன் பிறழ்வு இதுவரை 12 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, இந்தியாவிலும் புதிய பயணக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டில் விமானப் பயணங்களில் ஈடுபடுவோர் பயணத்திற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் COVID தொற்று இல்லையென்பதை உறுதி செய்ய வேண்டும் என மும்பை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அத்துடன், எச்சரிக்கை மிகு நாடுகளில் இருந்து வருகை தருவோர் 7 நாட்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.