பேச்சாளர் பதவியில் மாற்றம் ஏற்படுமா? – கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கூட்டம் இன்று!

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) கொழும்பில் நடைபெறவுள்ளது.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதவிநிலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு புதிய பேச்சாளர் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பதவி வகித்து வருகின்றார்.

இந்த நிலையில், சுமந்திரன் அப்பதவியைப் பயன்படுத்தி வரைமுறைகள் அற்று செயற்படுவதாகவும் தம்முடன் கலந்துரையாடல்களின்றி முக்கிய விடயங்களை கையாள்வதாகவும் ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

இதனையடுத்து, திருகோணமலையில் நடைபெற்ற ரெலோவின் மத்திய குழு கூட்டத்தில் நாடாளுமன்றக் குழுவின் தலைவராக சம்பந்தன் நீடிப்பதற்கு இடமளிப்பதென்றும் ஏனைய செயலாளர் மற்றும் ஊடகப்பேச்சாளர் பதவிகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதென்றும் குறிப்பாக பங்காளிகளையும் உள்ளீர்த்தவாறு அமையவேண்டும் என்று வலியுறுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, இந்த தீர்மானம் குறித்து கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு வலியுறுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய ஊடகப்பேச்சாளர் பதவியை ஏற்பதற்கு ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் புளோட் தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன் ஆகிய இருவரில் ஒருவர் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வாக்கு வீதம் சரிவு, தேசியப்பட்டியல் விவகாரம் என கூட்டமைப்புக்குள் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், பொதுத்தேர்தல் இடம்பெற்ற பின்னர் இடம்பெறவுள்ள முதலாவது நாடாளுமன்றக் கூட்டம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.