பொதுத் தேர்தலினால் இடைநிறுத்தப்பட்டிருந்த தொழில் வழங்கும் திட்டம் ஆரம்பம்!

0

பொதுத் தேர்தலினால் இடைநிறுத்தப்பட்டிருந்த 150,000 பேருக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தை தாமதிக்காது செயற்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

50,000 தொழில் வாய்ப்புக்கள் தொழிலற்ற பட்டதாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மிகுதி 100,000 தொழில் வாய்ப்புகளுக்காக பொருத்தமானவர்களை குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  கடந்த வருடம் நவம்பர் மாதம் பதவியேற்று ஓரிரு வாரங்களில் பட்டதாரிகள் 50,000 பேருக்கும் குறைந்த வருமானம் கொண்டவர்கள் 100,000 பேருக்கும் தொழில் வாய்ப்பினை வழங்குவதற்காக வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்தார்.

பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களை கோரி தெரிவு செய்தல் பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. குறைந்த வருமானம் கொண்டவர்கள் 100,000 பேருக்கு தொழில்வாய்ப்பை வழங்குவதற்காக பல்துறை அபிவிருத்தி செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது.

ஜனாதிபதி அவர்களின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தின்படி வறுமையற்ற இலங்கை நாட்டை உருவாக்குவதே இவ் வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

2020 நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் 150,000 பேருக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பணிப்புரை விடுத்தார். இதனால் இவ்வேலைத்திட்டம் இடை நிறுத்தப்பட்டது. ஆகஸ்ட் 05 பொதுத் தேர்தல் நிறைவடைந்தவுடனே அரசியலமைப்பின் 08ஆவது பிரிவின்படி நிறைவேற்றுத்துறையை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி  நடவடிக்கை எடுத்தார்.

 புதிய பிரதமர் ஆகஸ்ட் 09ஆம் திகதி பதவியில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அடுத்த நாள் பிரதமரின் செயலாளர் நியமிக்கப்பட்டார். தேர்தல் நிறைவுபெற்ற ஒரு வாரத்தில் அதாவது ஆகஸ்ட் 12ஆம் திகதி அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்தனர்.

அமைச்சுக்களின் செயலாளர்கள் நேற்று நியமிக்கப்பட்டனர். புதிய  நாடாளுமன்ற ஒன்றுகூடல் எதிர்வரும் (வியாழக்கிழமை)   வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்படும்.

நிர்வாக பொறிமுறை முறையாக ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் 150,000 தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தை தாமதிக்காது நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி அவர்கள் தீர்மானித்தார். தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் எதிர்வரும்  16 ஆம் திகதி ஜனாதிபதி அலுவலக இணையத்தளத்தில் வெளியிடப்படும்.

தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்களை அனுப்புதல்  எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் நியமனம் பெறுபவர்கள் செப்டெம்பர் 01 தமக்கு அருகில் உள்ள பிரதேச செயலகத்திற்கு செல்ல வேண்டும். தகுதி பெற்ற பட்டதாரிகளின் பெயர்கள் பட்டியலில் இல்லாதவிடத்து ஜனாதிபதி அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட 100,000 பேருக்கான தொழில்களில் அமர்த்துதல் அந்த நிகழ்ச்சித்திட்டத்திற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள செயலணியின் மூலம் செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்.