பொதுமக்கள் வாக்களிப்பே இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு: 5 தமிழ் கட்சிகள் வலியுறுத்தல்

0

இலங்கை தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய ஐந்து தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்திற்கு அண்மையில் அனுப்பிய கடிதத்தின் உள்ளடக்கம் தற்போது தமிழ் தேசிய அரசியல் அரங்கின் பிரதான பேசுபொருளாகியுள்ளது.

சர்வதேச ரீதியில் நடத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொதுமக்கள் வாக்களிப்பே இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன் , ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சிறிகாந்தா ஆகியோர் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களுக்கு கடிதத்தின் ஊடாக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி , பொறுப்புக்கூறலுக்கு அழைப்பு விடுக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை அரசாங்கம் மீண்டும் மீண்டும் புறக்கணித்துள்ளதால், தண்டனையின்மை நீடித்துள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் , மனித உரிமை பாதுகாவலர்கள், சிவில் சமூகத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டுள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் சட்ட அமுலாக்க அதிகாரிகளால் COVID கட்டுப்பாடுகள், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் அதிகரித்த பயன்பாடு அமைதியான போராட்டங்களுக்கான சந்தர்ப்பங்களைக் கட்டுப்படுத்துவதாகவும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயரில் தமிழ் மக்களின் குடியிருப்புகள் அரச திணைக்களங்களால் சூறையாடப்படுவதாகவும் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் கடிதத்தில் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.

இராணுவமயமாக்கல், யுத்தத்தின் பின்னரான பெண்களின் நிலை, வலிந்து காணாமற்போனோர் தொடர்பிலும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.