பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை – சர்ச்சைகள் குறித்து வெளிப்படுத்தினார் சுமந்திரன்!

0

பல்லாயிரக்கணக்கான மக்களின் பேராதரவுடன் நடைபெற்று முடிந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் குறித்து முன்வைக்கப்படும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் விளக்கமளித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியினை ஏற்பாடு செய்யும் போது எங்களிடம் 10 விடயங்களை சுட்டிக்காட்டி, இதனை வலியுறுத்தியே பேரணியினை முன்னெடுக்கப்போவதாக தெரிவித்தனர்.

இவ்வாறான நிலையில் ஐந்து நாட்கள் தொடர்ந்தும் பேரணியினை முன்னெடுத்து சென்று, ஐந்தாவது நாளில் புதிதாக விடயங்களை பிரகடனமாக தெரிவிப்பது என்பது மக்களுக்கு நேர்மையாக நடந்து கொள்ளுகின்ற ஒரு விடயம் அல்ல.

பிரகடனம் என்று சொல்லி படிக்கப்பட்டதிலே நல்ல விடயங்களும் இருக்கலாம் அதைபற்றி நான் பேசவில்லை. அது தமிழ் மக்களுக்கு உரிய விடயங்களாக இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம் அதை பற்றி நான் பேசவில்லை.

ஆனால் இந்த பத்து விடயங்கள் குறித்து சொல்லி வாருங்கள் என அழைத்து விட்டு, மக்களும் சேர்ந்து நடந்த பின்னர் வேறு விடயங்களை இதுதான் பிரகடனம் என சொல்லுவது முழுக்க முழுக்க மக்களை ஏமாற்றுகின்ற ஒரு செயல்.

நான் துரோகம் என்ற சொல்லை ஒருபோதும் பயன்படுத்துவது இல்லை. நான் மக்களை ஏமாற்றுகின்ற செயல் என்று சொல்லுகின்றேன். இந்த துரோகம் என்ற சொல்லும், இன்னுமொருவர் சொல்லியிருந்தார் சுமந்திரன் இந்த போராட்டத்தினை காட்டிக்கொடுத்து விட்டார் என்று.

காட்டிக்கொடுப்பு, துரோகம் என்கின்ற சொற்கள் தமிழ் அரசியலில் கனதிநிறைந்த சொற்கள் அதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. எவரையாவது தீர்த்துக் கட்ட வேண்டுமாக இருந்தால் முதலில் அவருக்கு துரோகி பட்டம் கொடுப்பார்கள். அது அண்மைக்காலமாக இல்லாமல் இருந்தது. எனக்கும் பல தடவைகள் அந்த பட்டம் வழங்கப்பட்டது.

இந்தநிலையில் எனக்கு வழங்கப்பட்ட விசேட பாதுகாப்பு நீக்கப்படுகின்ற தருவாயில், திரும்பவும் காட்டிக்கொடுப்பு, துரோகம் என்கின்ற சொற்கள் பயன்படுத்தப்படுவது ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாமல் செய்யப்படுவதாக நான் நினைக்கவில்லை. ஆகவே சரத் வீரசேகரவிற்கும் இந்த சொற்களை பயன்படுத்துபவர்களுக்கும் நிறையவே தொடர்பு இருப்பதாக நான் சந்தேகிக்கின்றேன்.

அத்துடன், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியின் ஆரம்பத்தில் நான் வரவேண்டும் என வலியுறுத்திக்கேட்டுக் கொண்டார்கள். ஏற்பாட்டார்கள் சாணக்கியனுடன் பேசும் போதெல்லாம் இதனை வலியுறுத்தினர்.

இதன்காரணமாக நான் மூன்று முக்கிய வழக்குகளை வாதாடும் பொறுப்பினை சயந்தனிடம் ஒப்படைத்து விட்டு சென்றேன். நான் செல்லுவம் வரை அனைவரும் வாகனங்களில் இருந்து இறங்காமல் எனக்காக காத்திருந்தார்கள்.

நான் அங்கு சென்று ஒவ்வொருவராக அவர்களின் கார்களில் இருந்து இறங்கி வருமாறு அழைத்ததன் பின்னரே அவர்கள் வந்து போராட்டத்தினை ஆரம்பித்தனர்.

இரண்டாவது, மூன்றாவது நாட்களில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிற்கு செல்லதாக கூறுபவர்கள், முதல் நாளில் நாங்கள் முன்னிற்கு சென்றமை குறித்து எதுவும் பேசவில்லை.

முதல் நாளில் தடைகளை உடைக்க தேவைப்பட்டவர்கள் பின்னர் அவர்களுக்கு தேவைப்படவில்லை“ என அவர் இதன்போது கவலை வெளியிட்டுள்ளார்.