பொத்துவில் − பொலிகண்டி பேரணி : சுமந்திரன், சாணக்கியன் உள்ளிட்ட 500ற்கும் அதிகமானவர்களுக்கு எதிராக வழக்கு

0

நீதிமன்ற உத்தரவை மீறி, பொத்துவில் முதல் பொலிகண்டி வரை ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்ட 500ற்கும் அதிகமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் என பலரும் உள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான M.A.சுமந்திரன், R.சாணக்கியன், S.ஶ்ரீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், S.கஜேந்திரன், C.V.விக்னேஸ்வரன் உள்ளிட்டோரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் மணிவண்ணன், M.K.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், ஶ்ரீகந்தா உள்ளிட்டோரும் அடங்குவதாக கூறப்படுகின்றது.

தமிழர்களின் உரிமைக்காக கடந்த 3ம் திகதி அம்பாறை − பொத்துவில் நகரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி, கடந்த 7ம் திகதி யாழ்ப்பாணம் − பொலிகண்டியில் நிறைவு செய்யப்பட்டது.

கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில், குறித்த 5 தினங்களில் சுமார் 15 நீதிமன்ற தடை உத்தரவுகள் பெறப்பட்டிருந்த போதிலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை பொருட்படுத்தாது முன்னோக்கி சென்றிருந்தனர்.

இந்த நிலையில், பொலிஸார் மற்றும் புலனாய்வுத்துறையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட வீடியோ காணொளிகளின் ஊடாக, நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

நீதிமன்ற உத்தரவை மீறியமை, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடர எதிர்பார்த்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதற்காக பொலிஸ் மாஅதிபர் மற்றும் பொலிஸ் சட்டப்பிரிவு ஆகியோரின் உதவிகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழர்களின் நிலஆக்கிரமிப்பு, வடக்கு மற்றும் கிழக்கு பௌத்த மயமாக்கல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம், முஸ்லிம்களின் உடல்கள் நல்லடக்கம், மலையக மக்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.