மட்டக்களப்பில் இறால் பண்ணையினை மீண்டும் ஆரம்பிக்க முடிவு- குடிநீர் பாதிக்கப்படாது என உறுதியளிப்பு

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் இறால் வளர்ப்பினை ஊக்குவித்து அதனூடாக வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தவும் அந்நிய செலாவணியை ஈட்டும் வகையிலும் புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்படி, மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகிழடித்தீவில் உள்ள இறால் பண்ணையினை மீண்டும் ஆரம்பித்து அதன்மூலம் கிராம மட்டத்திலான வேலை வாய்ப்பினையும் வருமானத்தினையும் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி இந்தத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்றது. நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் இந்த விசேட கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் நிமால்சந்திராரட்ன உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்துக்களை முன்வைத்தனர்.

இதன்போது, குறித்த இறால் பண்ணை ஆரம்பிக்கப்படுவதால் விவசாய நிலங்கள் உவர் நிலமாக மாறும் எனவும் குடிநீர் உவர் நீராக மாறும் நிலையுள்ளதாகவும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

எனினும், அவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாமல் சுற்றுச்சூழலை கருத்திற்கொண்டு புதிய திட்டம் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதோடு அதற்காக ஒரு குழுவும் இதன்போது நியமிக்கப்பட்டது.

இந்தத் திட்டம் செயற்படுத்தப்படும்போது குறித்த பிரதேசத்தினைச் சேர்ந்தவர்கள் பங்காளிகளாக மாறும் நிலையேற்படுவதுடன் பெருமளவானோர் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன் மாதாந்தம் ஐயாயிரம் மில்லியன் ரூபாயினை அந்நிய செலாவணியாக ஈட்டமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.