மட்டக்களப்பில் புலிகளை மீள உருவாக்க முயற்சிக்கின்றீர்களா? தீவிர விசாரணை

0

புலிகளை மீள உருவாக்க முயற்சிக்கின்றீர்களா? என கூறி மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் தலைவர் சிவயோகநாதனிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

மட்டக்களப்பில் உள்ள அவரது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு பொலிஸார் சிவில் சமூக அமைப்புகளின் தலைவர் சிவயோக நாதனை விசாரணை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.

ஆனால் அவர் வீட்டில் இல்லாத காரணத்தால் அவரை தொலைபேசியில் அழைத்து அவரது அலுவலகத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசு சார்பற்ற நிறுவனங்களின் அலுவலகமான இணையத்திற்கு சென்று சிவயோகநாதனை விசாரணை செய்த பொலிஸார் “நீங்கள் புலிகளை மீள உருவாக்க முயற்சிக்கிறீர்களா? புலிகளுக்கு உதவி செய்கின்றீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன் இணைய நிறுவனத்தில் உள்ள அங்கத்தவர்களின் பெயர் விபரங்கள், அங்கத்துவம் வகிக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பெயர் விபரங்களையும் கோரியுள்ளனர். அதனை தரமுடியாது என கோரிய போது அனைவரையும் கொழும்புக்கு அழைத்து விசாரணை செய்ய வேண்டி வரும் என அச்சுறுத்தி உள்ளனர்.

அதன் பின்னர் இணையத்தில் உள்ள அங்கத்தவர்களின் பெயர் விபரங்களை வழங்கி உள்ளனர். மட்டக்களப்பு மாவட்டம் சார்ந்த மக்கள் பிரச்சினைகளில் முன்நின்று குரல் கொடுத்து வரும் சிவயோகநாதன், அண்மையில் இலங்கை அரசுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கான ஆவணத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புக்கள் சார்பாக கலந்து கொண்டு கையொப்பம் இட்டவர் என்பதுடன், மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய சிங்கள விவசாய செய்கை, பண்ணையாளர்கள் மீது சிங்களவர்களால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு எதிராக முன்நின்று குரல் கொடுத்து வருகின்றார்.

இந்நிலையில், இவர் மீதான விசாரணை செயற்பாடுகளை முடக்கும் நோக்குடன் மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல் என தெரியவருகிறது.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில், அந்த அறிக்கையில் கையொப்பம் இட்ட சிவில் சமூக தலைவரிடம் புலிகளை மீள உருவாக்க முயற்சிக்கின்றீர்களா என பொய்யான காரணங்களைக் கூறி அவரை அச்சுறுத்தி அவரது செயற்பாடுகளை முடக்குவதற்கு அரசு முனைகிறதா? என்ற கேள்வி எழுகின்றது.