மட்டக்களப்பில் மூன்று வாக்காளர்களுக்காக ஒரு வாக்களிப்பு நிலையம்

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று வாக்காளர்களுக்காக ஒரு வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மாந்தீவு தொழுநோயாளர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்கள் வாக்களிப்தற்கு வசதியாக இந்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வாவியின் மத்தியில் அமைந்துள்ள மாந்தீவு எனும் தீவுத் திடல் பகுதியில் பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் தொழு நோயாளர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக அங்கு ஒரு தொழுநோய் வைத்தியசாலை அமைக்கப்பட்டு அது தற்போது வரை இயங்கி வருகின்றது.

கூடவே அங்கு வேலைசெய்யும் சுகாதாரத்துறை வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் ஆகியோர் தங்கியிருக்கும் விடுதிகளும் வழிபாட்டுத் தலங்கள் உட்பட பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் தற்போது அந்த வைத்தியசாலையில் மூன்று பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு வாக்குரிமையும் உள்ளன.

இவர்களுக்கான வாக்குப் பெட்டி இயந்திரப்படகு மூலம் மாந்தீவு வாக்கெடுப்பு நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி கலாமதி தெரிவித்தார்.

மூன்று வாக்காளர்களுக்கும் பொதுவான நியமங்களே கடைப்பிடிக்கப்படவுள்ளதாகவும் வழமையான வாக்களிப்பு நேரமாகிய 7.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை வாக்களிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.