மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணியின் விசேட வலைத்தளம் அறிமுகம்!

0

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட வலைத்தளம் இன்று மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த விசேட வலைத்தளம் அரசாங்க அதிபரும் செயலணியின் தலைவருமான கலாமதி பத்மராஜாவினால் இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பாக மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணியின் www.covid19.batticaloa.dist.gov.lk என்ற வலைத்தளம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இதுகுறித்து, கலாமதி பத்மராஜா தெரிவிக்கையில், “கொரோனா தடுப்பு செயலணியினையும் பொதுமக்களையும் இணைக்கும் வகையிலேயே இந்த வலைத்தளம் தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமது வசதிக்கேற்ப கணினி, சிமார்ற் போன், ஐ-போன்களிலும் பயன்படுத்தக் கூடியவாறும் வெப்பேஜ், பேஸ்புக், இன்ஸ்டகிராம், டுவிற்றர்தளம் போன்றவற்றிலூடாகவும் தகவல்களை அனுப்பக்கூடியவாறும் இலகுபடுத்தப்பட்டுள்ளது.

இவ்வலைத் தளத்தினூடாக பொதுமக்கள் தமது எவ்வித தேவைகளையும் கோரமுடியும் எனவும், உதாரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் தமக்கு ஏற்படும் நோய் தொடர்பான விபரங்களைக் கூறி வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளவும் அம்பியூலன்ஸ வசதியைப் பெற்றுக் கொள்ளவும், அல்லது தனிமைப் படுத்தப்பட்டவர்கள் தனிமையினால் உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் அதனையும் பெற்றுக் கொள்ளமுடியும்.

இன்னும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் உணவு இல்லாமல் இருப்பவர்கள் கூட அதனைப் பெற்றுக் கொள்ளவும் முடியும் என்பதுடன் கொரோனா தடுப்பு செயலணிக்கு அல்லது பொதுமக்களுக்கு உலர் உணவு, மருத்துவ உதவிகள் போன்றவற்றை வழங்க விரும்புவோர் கூட இதனூடாக தொடர்பினை ஏற்படுத்த முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அத்தியவசியப் பொருட்கள், சேவைகள் தொடர்பான குறைபாடுகள் மற்றும் முறைப்பாடுகளையும் இங்கு பதிவிடுவதன் மூலம் அவை உடனுக்குடன் தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் இவ்வலைத்தளத்தில் வரும் கோரிக்கைகளை 24 மணிநேரமும் அவதானித்து அமுல்படுத்தவும், அறிக்கையிடவும் விசேட குழு இயங்குவதாகவும், மேலும் இந்த இணைய வலைத்தளத்தினை தொண்டர் அடிப்படையில் வடிவமைத்துத்தந்த டானியல் பாக்கியம், ஜோயில் ஜெரோசன் ஆகியோருக்கு நன்றியும் தெரிவித்தார்.

மேலும் ஊடகவியலாளர்களுக்கான கேள்விகளுக்கு பதிலளிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலமை தற்போது ஓரளவுக்கு சுமுகமாக இருப்பதுடன் இந்த நிலமை தொடர்ச்சியாக இருப்பதற்கு பொதுமக்களது பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்பதுடன், சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப நடந்து கொள்ளுமாறும், வெளியில் வர அனுமதிக்கப்பட்ட நேரத்தில் தமது அத்தியவசிய தேவைக்காக மாத்திரம் பொதுமக்கள் வெளியில் வருவதுடன் ஏனைய நேரங்களில் வீடுகளிலேயே இருந்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

அதேவேளை, மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வெளிநாடுகளில் இருந்து அண்மையில் வந்தவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன், அன்றாடக் கூலித் தொழில் புரிபவர்களின் விபரங்கள் சகல பிரதேச செயலக ரீதியாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான உலருணவு உதவிகளை வழங்க அரச சார்பற்ற நிறுவனங்கள், நலன்விரும்பிகளிடம் உதவிகளைக் கோரியுள்ளதாகத் தெரிவித்ததுடன் வேல்ட் விசன் நிறுவனம் 650 உலர் உணவுப் பொதிகளையும், ஹெல்பிங்கேன்ட் அமைப்பு 100 பொதிகளையும் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். இதிலிருந்து ஒருபகுதி தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் மேலும் கிடைக்கப்பெறும் உதவிகள் பிரதேச செயலகங்கள் ஊடாக பகிர்ந்தளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.