மட்டக்களப்பு நீதிமன்ற வளாகம் அமைந்துள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு!

0

மட்டக்களப்பு நீதிமன்ற வளாகம் அமைந்துள்ள பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

அத்தோடு, அதிகளவு மக்கள் கூடியதால், அப்பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இன்றைய தினம் பல்வேறு சிறைச்சாலைகளில்  இருந்து மட்டக்களப்புக்கு அழைத்துவரப்பட்டிருந்தனர்.

சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 62 பேர் மட்டக்களப்பு உட்பட பல்வேறு சிறைகளிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 06 மாதங்களுக்கு மேலாக அவர்கள் நீதிமன்றுக்கு அழைத்துவரப்படாத நிலையில், இன்றைய தினம் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டனர்.

இதன்போது குறித்த சந்தேகநபர்களின் குடும்ப உறவினர்கள் நீதிமன்றுக்கு முன்பாக திரண்டதால் அப்பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

நீதிமன்றுக்கு முன்பாக மற்றும் நீரூற்று பூங்கா போன்ற பகுதிகளில் பெருமளவானோர் காத்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிமன்ற பகுதிகளில் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.