மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவைர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்!

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர்களாக இரஜாங்க அமைச்சர் எஸ். வியழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சந்திரகாந்தன், நஸீர் அஹமட், உபதலைவராக பொதுஜன பெரமுனை மாவட்ட அமைப்பாளர் ப. சந்திரகுமார் ஆகியோர் ஜனாதிபதி செயலனியின் பிரதம மேலதிக செயலாளர் என்டன் பெரேராவினால் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கே. கருணாகரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கமைவாக அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்து முன்னெடுத்துச் செல்வதற்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர்களாக மக்கள் பிரதிநிதிகள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேசங்களுக்கான கூட்டங்களை தலைமை தாங்கி நடாத்துவதற்காக, மக்கள் பிரதிநிகளை தலைவர்களாகவும், மேலதிக தலைவர்களாகவும், உபதலைவர்களாகவும் ஜனாதிபதியினால் முறையாக நியமிக்கும் வரை இக்கூட்டங்களை நடாத்துவதற்காக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலனியின் பிரதம மேலதிக செயலாளர் என்டன் பெரேராவினால் மக்கள் பிரதிநிதிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் பற்று, மண்முனைப் பற்று, போரதீவுப்பற்று மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவுகளுக்காக இரஜாங்க அமைச்சர் எஸ். வியழேந்திரனும், கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று, கோறளைப்பற்று தெற்கு, மண்முனை வடக்கு, மண்முனை தென்எருவில்,பற்று பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தனும்,

கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி, ஏறாவூர் நகர் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமடும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஏறாவூர் பற்று, மண்முனை மேற்கு, மண்முனை தென்எருவில்பற்று, போரதீவு பற்று மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலப் பிரிவுகளுக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு உபதலைவராக பரமேஸ்வரம் சந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்தார்.