மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற  இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் – இரா.சாணக்கியன் வலியுறுத்து!

0

மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க இந்தியா அழுத்தம் தெரிவிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகரையும் முக்கிய உறுப்பினர்களையும் நேற்று(சனிக்கிழமை) திருகோணமலையில் சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

 அத்துடன், வடகிழக்கு மற்றும் மட்டக்களப்பு மாவட்டம் சம்பந்தமான பல விடயங்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டிருந்தது.

அதில் முக்கியமாக தமிழ் மக்களின் காணி அபகரிப்பு தொல்பொருள் மற்றும் மகாவலி திட்டம் சம்பந்தமான பிரசச்னைகள் குறித்தும் இந்திய தூதுவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

மேலும், எமக்கான ஆரம்ப புள்ளியாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி அதன்மூலம் அதிகார பரவலாக்கலை அமுல்படுத்தவேண்டும் எனவும் இதன் மூலம் இவ்வாறான காணிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நாமே தீர்வை பெற முடியும் என்பது தொடர்பாகவும் இரா.சாணக்கியன் வலியுறுத்தியிருந்தார்.

எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தகவல் தொழில்நுட்ப துறையை வடகிழக்கில் நிறுவுவதற்கான பரிந்துரையினையும் இரா.சாணக்கியன் இந்த சந்திப்பின் போது முன்வைத்திருந்தார்.

இதன் மூலம் பல இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்க முடியும் என்பதனையும் இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் மட்டக்களப்பு, அம்பாறை, மன்னார் மற்றும் காங்கேசன்துறை போன்ற இடங்களில் துறைமுகங்களை உருவாக்குவதன் மூலம் இலங்கை – இந்திய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில் இங்குள்ள உள்ளூர் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியினை அதிகரிக்க முடியும் எனவும் இரா.சாணக்கியன் தெரிவித்திருந்தார்.

அத்துடன் மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க இந்தியா அழுத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் உள்ளூர் பயண சேவைகளை இதன் மூலம் உருவாக்குவதோடு சென்னைக்கான பயண கட்டமைப்புக்களை இங்கிருந்து ஏற்படுத்துவதன் மூலம் உல்லாச பிரயாண துறையினை மேலும் அபிவிருத்தி செய்வதோடு இதன் மூலம் பல தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம் எனவும் இரா.சாணக்கியன் இந்த சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.

அத்துடன் சமகால அரசியல் விடயங்கள் சம்பந்தமாகவும் இதன்போது ஆராயப்பட்டதாக தெரிவித்த இரா.சாணக்கியன், இச்சந்திப்பு எமது மக்களுக்கான எதிர்கால மாற்றத்தின் முதல் படி எனவும் குறிப்பிட்டிருந்தார்.