மட்டு நகரை உலகம் பேசுகின்ற நகரமாக மாற்றுவத்கான முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம் – நசீர் அஹமட்

0

மாவட்டத்தினை எவ்வாறு அபிவிருத்தி அடைந்த நகரமாகவும், மாவட்டத்திலுள்ள அத்தனை வளங்களையும் நவீனமயப்படுத்தி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்ற, உலகம் பேசுகின்ற நகரமாக மாற்றுவத்கான முழு முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். என்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ”உரிமை உரிமை என்று பேசிக்கொண்டு இருப்பவர்கள் சாதித்தது எதுவும் இல்லை அதனை விட்டு யதார்த்தத்திற்கு வரவேண்டிய தேவை மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இருக்கின்றது என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை

நாட்டின் நிலைமையை புரிந்து அதற்கேற்ப காய் நகர்த்த வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கின்றது. யுத்த காலத்தில் மாத்திரமல்ல. யுத்தத்திற்கு பின்பு வந்த ஆட்சியில் கூட நாங்கள் தொடர்ச்சியாக பல சோதனைகளை மட்டக்களப்பு மாவட்டம் சந்தித்து இருக்கின்றது. அந்த வரலாற்று துரோகத்தினை நாங்கள் இனிமேல் செய்யக் கூடாது என்று நீங்களும் நாங்களும் உத்தரவாதமளிக்க வேண்டிய காலகட்டத்தில் பேசிக் கொண்டிருக்கின்றோம்.

உரிமை என்று மக்களுக்கு கிடைத்தது என்ன. அவ்வாறு கிடைத்திருந்தால் இங்குள்ள யாரையும் நாம் பார்த்திருக்க முடியாது. யாருக்கும் உதவி தேவைப்பட்டிருக்க முடியாது. கடந்த அரசாங்கத்தில் மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டதற்காக காரணம் நாங்கள் தான் என்பதை இன்றாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.

கடந்த அரசாங்கம் மாகாண சபை ஆட்சி முடிவடைவதற்கு முன்னர் 13வது சீர்திருத்தத்தில் சிறுபான்மை சமூகத்திற்காக வேண்டுமென்று கிடைக்கப்பெற்ற சிறிய அதிகாரத்தினை பிற்போடுவதற்கு பாராளுமன்றத்தில் கை உயர்த்தியவர்கள் யார் என்று மனச்சாட்சியை தொட்டு கேட்க வேண்டும்.

மாகாண சபையில் இன்று சென்று எந்தவொரு வேலையையும் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பெண் பிள்ளைகளுக்கு நியமனம் வழங்கப்பட்டு மாகாண சபைக்கு சென்று வேலை செய்யக் கூடிய சூழ்நிலை நடைபெற்று வருகின்றது. அதனை மாற்ற முடியாத நிலையில் இருக்கின்றோம் என்று சொன்னால் மாகாண சபை அதிகாரம் எங்களது கையில் இல்லாத யாதார்த்தத்தினை புரிந்து கொள்ள வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் மற்றும் இந்திய தூதரகத்தின் இணை அலுவலகத்தினை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒட்டுமொத்த பிரச்சனைகள் மாத்திரமல்ல. மாவட்டத்தினை எவ்வாறு அபிவிருத்தி அடைந்த நகரமாகவும், மாவட்டத்திலுள்ள அத்தனை வளங்களையும் நவீனமயப்படுத்தி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்ற, உலகம் பேசுகின்ற நகரமாக மாற்றுவத்கான முழு முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இணக்கப்பாட்டு அரசியலை எல்லோரும் சேர்ந்து மாவட்டத்தினை அபிவிருத்தி செய்ய வேண்டிய கடமை எங்களது கைகளில் உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடவுச்சீட்டு அலுவலகத்தினை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இந்திய தூதரகத்தின் இணை அலுவலகத்தினை கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகின்றோம். நெடுஞ்சாலை இணைப்பு பாதையை கொண்டு வருவதற்கு பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றோம். என தெரிவித்துள்ளார்.

மீன்பிடித் துறையை எவ்வாறு முன்னேற்ற முடியும், நன்னீர் வளர்ப்பு மீன்களை உற்பத்தி செய்து எவ்வாறு ஏற்றுமதி செய்ய முடியும். இவற்றுக்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம். கதைகளால் அரசியல் செய்கின்ற கலாசாரத்தில் இருந்து மக்களும் மாறுபட வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கின்றது என்றும் தெரிவித்தார்.