மண் மாபியாக்களின் கூடாராமாக மாறிவரும் மட்டக்களப்பு – மக்கள் விசனம்

0

மட்டக்களப்பு – கிரான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பள்ளத்துச்சேனை எனும் இடத்தில் எந்தவித அனுமதியும் இல்லாமல் அதிகளவான மண்  அகழப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான மண் அகழ்வு இடம்பெறுவதனால் எதிர்காலத்தில் அப்பிரதேச மக்கள் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இடம்பெயரக் கூடிய வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இந்த மண் அனைத்தும் வெளிமாவட்டங்களுக்கு கொண்டுசெல்லப்படுவதாகவும் இதற்கு பின்னால் அரசாங்கம் சார்ந்த அரசியல்வாதிகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘இதற்கு யார் அனுமதி வழங்கியது என்பது, இதுவரைக்கும் தெரியாத நிலை காணப்படுவதால் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் சி.சந்திரகாந்தன் மற்றும் இராஜங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மண் மாபியாக்களின் கூடாராமாக மாறிவரும் மட்டக்களப்பு மண் வளத்தைப் பாதுகாக்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலையிட்டு நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே இந்த சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள் அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் உட்பட மண்வள உத்தியோகத்தர்கள் கவனம் எடுத்து உடனடியாக இதைத் தடுத்து நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.