மனித உரிமைகள் ஆணையாளருக்கும் அவரது அறிக்கைக்கும் எதிராக கடும் எதிர்ப்பு வெளியிடப்படும் – இலங்கை அரசு

0

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கும், அவரது அறிக்கைக்கும் எதிராக இலங்கை கடும் எதிர்ப்பை வெளியிடும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இலங்கை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் காரணமாக நாங்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்.

இலங்கை கடந்த காலங்களை போல உண்மை மற்றும் அர்ப்பணிப்புகளுக்காக உறுதியுடன் நிற்கும். மனித உரிமை பேரவையை எதிர்கொள்வதற்கு நாங்கள் அனைத்தை நடவடிக்கைகளையும் முன்னெடுத்துவருகின்றோம்.

வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் நிலைப்பாட்டை முன்வைத்து ஐந்துநிமிடங்கள் உரையாற்றுவார்.

மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு பதில் அறிக்கையை நாங்கள் தயாரித்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் தமிழ்ப்பிரிவினைவாத மோதல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் தொடர்புபட்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் வலியுறுத்தியுள்ளார்.

ஜெனிவாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கையொன்றை மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் சமர்ப்பிக்கவிருக்கிறார்.

அவ்வறிக்கையில், சுமார் 37 வருடங்களாக நடைபெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கான நீதியை உறுதிசெய்வதற்குத் தவறியுள்ளமை தொடர்பில் அவர் இலங்கை மீது குற்றஞ்சுமத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.