மாகாண சபைத் தேர்தலை ரணிலே தடுத்து நிறுத்தினார்

0

கடந்த காலத்தில் மாகாண சபைத் தேர்தலை ரணில் விக்ரமசிங்கவே தடுத்து நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவைப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “தற்போது சுமார் மூன்று ஆண்டுகளாக மாகாண சபை இல்லை. எனது அரசாங்கத்தில் இருந்த பிரதமரே பல்வேறு நாடாளுமன்ற குழுக்களை நியமித்து மாகாண சபைத் தேர்தலை இல்லாது செய்துவிட்டார்.

இந்த நிலையிலேயே, குறித்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தற்போதைய ஜனாதிபதிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுத் தருமாறு நாம் கோருகின்றோம். அரசியல்வாதிகளின் அரசியல் கலாசாரம் சிதைவடைந்துள்ளது.

அரசியல்வாதிகள் பலர் ஊழல் மோசடிகளுக்கு அடிமையாகியுள்ள நிலையில் மக்களின் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளார்கள். இவை அரசியல் குழப்பத்தின் ஒரு பகுதியாகும். அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை எடுத்துக் கொண்டால், இவற்றை தீர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கத்தை பலப்படுத்த வேண்டும்.

எதிர்க் கட்சியினருக்கு நாடாளுமன்றப் பலம் சென்றால் நாடு பாரிய பிரச்சினைக்கு தள்ளப்படும். அரசாங்கம் ஒரு கட்சியாகவும், ஜனாதிபதி ஒரு கட்சியாகவும் இருந்தால் நாடு அழிவடைகின்றது.

எனக்கு அதுவே நடந்தது.நான் பொலன்னறுவை என்பதால் என்னை எப்படியாவது மடித்து எடுக்க முடியும் என நினைத்துக் கொண்டு, அவரின் கட்சியினருடன் கலந்துரையாடி பொது வேட்பாளராக என்னைத் தெரிவு செய்தார். ஆனால் அவர் கூறிய விடயங்களை நான் கூறவில்லை.

இதனால் அவரது தந்திரம் நிறைவேறவில்லை.இதனால் தொடர்ந்தும் மோதல் ஏற்பட்டது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.