மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தடை

0

வடக்கில் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்ய பொலிஸார் மற்றும் சுகாதாரத் துறையினர் எடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் யாழ். மேல் நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாத தடைச்சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் விதிகளையோ காரணமாகக் கொண்டு, மாவீரர் தின அனுஷ்டிப்பை தடை செய்ய முயற்சிக்கக் கூடாது என உத்தரவிடுமாறு கோரி இந்த மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

மனுவில், வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

இந்த மனுக்கள் தொடர்பான விசாரணை, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, குறித்த மனுக்களை நிராகரித்தார்.

இந்த விடயம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட விடயம் என்பதால், அதனை மாகாணத்திற்குரிய விடயமாகக் கருத முடியாது என நீதிபதி அறிவித்தார்.

கூட்டாக இணைந்து மாவீரர் தினத்தினை அனுஷ்டிப்பது தேசிய பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட விடயம் எனவும், அதனை விசாரிப்பதற்கு தமது நீதிமன்றுக்கு நியாயாதிக்கம் இல்லை எனவும் நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் கூறினார்.

எனினும், மனுதாரர்கள் தங்களுடைய உறவினர்களைத் தனிப்பட்ட முறையில் நினைவுகூர்வதைத் தடுக்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மனுதாரர்கள் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், வி.மணிவண்ணன் மற்றும் கே.சயந்தன் ஆகியோர் இன்று மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இந்த வழக்கைப் பார்வையிடுவதற்காக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மாஅதிபரும், சட்டத்தரணியுமான அஜித் ரோஹன மன்றுக்கு வருகை தந்திருந்தார்.

இதனிடையே, முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நினைவேந்தலுக்கு மாவட்ட நீதவான் நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவுகூரலை தடுக்கும் வகையில் உத்தரவிடுமாறு கோரி முல்லைத்தீவு பொலிஸ் நிலைய அத்தியட்சகரால் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அத்துடன், திருகோணமலை சம்பூரில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தடை விதித்து மூதூர் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சம்பூர் – கிழக்கு ஆலங்குளம் பகுதியிலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவு தினத்தை அனுஷ்டிக்க தடை விதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.