மின்சார சபையின் பொறியியலாளர் பணிப்புறக்கணிப்பு

0

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் இன்று (வியாழக்கிழமை) நண்பகல் 12 மணி முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

06 கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் பொறியியலாளர் சங்க உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

முறையற்ற மற்றும் சட்டவிரோதமான நியூபோட்ரஸ் LNG கொடுக்கல் வாங்கலை முன்னெடுக்காதிருத்தல்.

தற்போது முன்னெடுக்கப்படும் LNG விலைமனு கோரல் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லல்.

1969 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மின்சார சபை சட்டத்தின் திருத்தங்களை இடை நிறுத்தல்.

பொதுமுகாமையாளர் பதவி அரசியல்மயப்படுவதை தடுத்தல்.

மின்சார சபையை பகுதிகளாக பிரிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்.

சிரேஷ்ட முகாமையாளர்களை இடமாற்றம் செய்வதை இடைநிறுத்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அவர்கள் காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணி வரையில் மாத்திரமே கடமையில் ஈடுபடவுள்ளனர்.

எனினும், அவசர நிலைமைகள் மற்றும் மின்சார துண்டிப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களில் கடமை நேரத்திற்கு மேலதிகமாக சேவைக்கு சமூகமளிக்கவுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை ஏற்கனவே நியமித்துள்ள, கொள்முதல் குழுக்கள், தொழில்நுட்ப குழுக்கள், செயற்றிட்டக் குழுக்கள் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் இணக்கப்பாட்டுக்கு வரும் குழுக்கள், விலைமனு திறப்பதற்கான குழுக்கள் ஆகியவற்றிலிருந்தும் விலகுவதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வுகள் கிடைக்காவிடின் இந்த சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தி வலுப்படுத்தவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.