மியன்மாரை போன்ற நிலை இலங்கையிலும் ஏற்பட்டு விடக் கூடாது! -முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய

0

மியன்மாரின் ஜனநாயக விரோத இராணுவ அடக்குமுறையில் அந்நாட்டு இளைஞர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

அதிகார மோகமே இதற்கான காரணமாகும், இந்த நிலைமை நாளை இலங்கைக்கும் வந்துவிடக் கூடாது என முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்தார்.

சுயாதீன ஆணைக்குழுக்கள் மீது அரசியல் தலையீடுகள் ஏற்பட ஆரம்பித்துவிட்டது, இவ்வாறான நிலையில் மாகாணசபை தேர்தலை நடத்தக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் நிகழ்கால செயற்பாடுகள், மாகாண சபை தேர்தலுக்கான நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

இன்று சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகள் ஏற்பட்டுள்ளன.

சுயாதீனம் என்ற பெயரில் மறைமுகமான அரசியல் அதிகாரம் என்ற இயங்கிக் கொண்டிருக்கிறது, அதிகார மோகத்தில் செயற்படும் ஒரு சிலர் அரசியல் தலைவர்களின் நோக்கங்களுக்கு இடமளிக்க கூடாது.

நீதிமன்ற சுயாதீனம் கூட இன்று பாரிய சவாலுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறான நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாது. இது நாட்டின் சுயாதீனத்தை கேள்விக்கு உட்படுத்தும்.

20 ஆவது திருத்தத்தை அவசர அவசரமாக கொண்டுவந்து நிறைவேற்றிய சிலருக்குத்தான் இன்று மாகாணச பை தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இவை தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் பலமாக குரல் எழுப்ப வேண்டும்.

மியன்மார் இன்று மிக மோசமான ஜனநாயக அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஜனநாயாகத்துக்கான புரட்சியில் பலநூறு பேர் இப்போது வரையில் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு ஜனநாயக புரட்சி ஒன்று வெடித்துள்ளது.

இன்று மியன்மாரில் நடந்துகொண்டிருக்கும் ஜனநாயக விரோத செயற்பாடுகள் நாளை எமது நாட்டிலும் நடந்துவிடக்கூடாது. அங்கு கொல்லப்பட்டுவரும் பெரும்பாலானவர்கள் இளைஞர்களாவர்.

அங்கு அவ்வாறு ஜனநாயக விரோத செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதால் இலங்கையிலும் தற்போதைய ஜனாதிபதி அவ்வாறு செயற்படுவார் என கூற முயற்சிக்கவில்லை.

ஆனால் நாளை எதுவேண்டுமானாலும் நடக்கலாம். இன்று இலங்கையின் பயணம் ஆரோக்கியமானதல்ல என்பது தெளிவாக தெரிகிறது எனவும் அவர் கூறினார்.