மீண்டும் இலங்கையில் கொரோனா பரவலாம்

0

மக்களின் கவனயீனத்தால் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு வாய்ப்புள்ளதென கொவிட்-19 தொற்றை ஒழிக்கும் படையணியின் தலைவரான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கைக்கு வந்த இந்தியக் கப்பலில் இருந்த கொவிட்-19 தொற்றாளர்கள் காரணமாக, இதுவரை 34பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவத்தின் 71ஆவது நிறைவாண்டு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் வழிபாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

இந்த வழிபாட்டு நிகழ்வுகளின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொரேனா வைரஸ் தொற்று தொடர்பாக சவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளதாவது,  “கொரோனா வைரஸ் தொற்று பரவல் இலங்கையில் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை. இன்னும் நாட்டில் இருக்கிறது.

மார்ச் 11ஆம் திகதி முதல் 50 நாட்களிற்குள் சமூகத்திலிருந்து இந்தத் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு எமக்கு முடிந்தது.

ஆனாலும், வெளிநாடுகளுக்கு தொழில்நிமித்தம் சென்று, கொவிட்-19 நெருக்கடிக்கு மத்தியில் நாடு திரும்புகின்றவர்களும், இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதால் உள்நாட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ஆகவே இந்தத் தொற்று இருக்கின்ற நிலையில், படையினர் முற்றுமுழுதாக வேறு பக்கம் பணிகளை செய்வதற்கு சந்தர்ப்பம் குறைவாக உள்ளது. இருந்த போதிலும் எமது படை பயிற்சிகளை நாங்கள் நிறுத்தவில்லை.

எந்த சந்தர்ப்பத்திலும் படையினர் தயாராகவே இருக்க வேண்டும் என்கிற நிலையில், கொவிட்-19 தொற்று நெருக்கடிக்கு மத்தியில் இப்பயிற்சிகள் பாதிக்கப்பட்டிருந்தன.

எமது சேவையான நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்தல் மற்றும் மக்களுக்கான சேவைகளை செய்வதற்கும் இராணுவம் தயாராக உள்ளது.

இதேவேளை  மட்டக்களப்பு கரையோரத்திலிருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் நியூ டயமன் கப்பல்  நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அந்தக் கப்பல் நிறுவனத்திடம் இருந்து இலங்கை அரசாங்கத்திற்கு ஒருதொகை பணம் வழங்கப்படவுள்ளது.

இரண்டாவது கப்பல், திருகோணமலையில் நங்கூரமிடப்பட்டுள்ள நிலையில் அங்கு 17 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். அந்த இந்தியக் கப்பல் திருகோணமலைக்கு செல்லும்முன், கொழும்பு துறைமுகத்திலிருந்த காரணத்தினால் கப்பலிற்குள் சென்றுவந்த 6 ஊழியர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களது குடும்ப அங்கத்தவர்களும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் மொத்தம் 34பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொவிட்-19 வைரஸ் சமூகத்தில் பரவாமலிருப்பதற்கான உச்சகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சுகாதார நெறிமுறைகளை மக்கள் மறந்தால் மீண்டும் தொற்று நாட்டில் பரவலாம்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.