முடக்க நிலை தளர்த்தப்பட்டாலும் மிகுந்த அவதானமாக மக்கள் செயற்பட வேண்டும் என எச்சரிக்கை!

0

கொரோனா முடக்க நிலை தளர்த்தப்பட்டாலும் மிகுந்த அவதானமாக மக்கள் செயற்பட வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் 11ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் முடக்க நிலை தளர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையிலேயே அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் துணைச் செயலாளர் நவீன் டி சொய்சா இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முடக்க நிலை தளர்த்தப்பட்ட பின்னர் ஏதேனும் ஓர் பகுதியில் வைரஸ் தொற்று பரவினால் உடனடியாக அந்த பகுதியை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் நீங்காத நிலையிலேயே அரசாங்கம் நாட்டை திறப்பதாகவும், இதனால் மிகுந்த அவதானத்துடன் சரியான வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்பொழுது நாள் ஒன்றுக்கு சுமார் 1600 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும் இது நாள்தோறும் 2500 பரிசோதனைகளாக அதிகரிக்கப்பட வேண்டுமென்பதே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை சற்றே ஆரோக்கியமானது என்ற போதிலும் முடக்க நிலை தவிர்ப்பு அபாயத்தை உருவாக்கக் கூடிய நிலை உண்டு என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.